ஜெ. மீதான சொத்துக் குவிப்பு விசாரணைக்கு 10 நாள் தடை

  • 26 மே 2014
ஜெயலலிதாவின் 1991-96 முதல்வர் ஆட்சிக் காலப்பகுதியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்துவருகிறது

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு 10 நாள் இடைக்கால தடை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்று வருகின்றது.

ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் மீது நடைபெற்றுவரும் இந்த வழக்கிலிருந்து தங்களது சொத்துகளை விடுவிக்கக்கோரி லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், தம்மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னால் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, லெக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்த ஜெயலலிதாவின் வழக்கறிஞர், அந்த வழக்கு முடியும்வரை சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

சிவில் வழக்கை விசாரித்துமுடித்த பின்னரே, குற்ற வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எதிர்வரும் ஜூன் 6ஆம் தேதி வரை (10 நாட்களுக்கு) பெங்களூரு நீதிமன்றத்தில் இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை நடத்த இடைக்கால தடை விதித்தனர்.

இதுதொடர்பாக உரிய விளக்கமளிக்குமாறும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

ஜெயலலிதா 1991ஆம் ஆண்டிலிருந்து 1996ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 66.65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குவித்துள்ளதாகத் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையே தற்போது பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.