தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • 24 ஏப்ரல் 2014
வாக்களிக்க வரும் ஜெயலலிதா

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. காலை பதினோரு மணி நிலவரப்படி 35.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை ஏழு மணிக்குத் துவங்கும் வாக்குப்பதிவு மாலை ஆறு மணிக்கு நிறைவுபெறுகிறது.

ஜெயலலிதா,கருணாநிதி வாக்களிப்பு

வாக்களிக்கிறார் திருமாவளவன்

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், காலை 9 பத்து மணியளவில் முதலமைச்சர் ஜெயல்லிதா சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்ததற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை தேர்தல்ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கோபாலபுரம் 2வது தெருவில் அமைந்துள்ள சாரதா மேல்நிலைப் பள்ளியில் தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர். வாக்குப்பதிவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தேர்தல் முடிவுகள் தி.மு.க அணிக்குச் சாதகமாக இருக்கும் என நம்புவதாகவும் அ.தி.மு.க.பணத்தில் புரள்கிற கட்சி என்றும் எனவே அவர்கள் பணப்பட்டுவாடா செய்வதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இருந்தபோதும், தாமதமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் நேரம் வழங்கப்படமாட்டாது என்றும் மாலை ஆறு மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வாக்களித்த இரு இளம் வாக்காளர்கள்

தர்மபுரியில் அதிகபட்ச விறுவிறுப்பு

காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சுமார் 35.28 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தர்மபுரியில் 42.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்திலுள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5 கோடியே 51 லட்சத்து 14ஆயிரத்து 867 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இருந்து தேர்தல் தொடர்பான புகார்களை அனைத்து தரப்பினரும் சொல்வதற்கு சென்னைத் தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சாக 42 வேட்பாளர்கள் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர் இதனால் இந்தத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வடசென்னையில் 40 பேர் போட்டியிடுவதால், இங்கும் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுமார் 9 லட்சம் பேர் வாக்களிக்க ஏதுவாக தொள்ளாயிரத்து ஐந்து வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று, சென்னையில் உள்ள ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முற்பகல் 11 மணி வரையில் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 27.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.