மீனவர் பிரச்சனைக்குக் காரணம் இந்தியாவின் பதிலடி இல்லாமையே: ஜெ.

  • 31 டிசம்பர் 2013
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு ஜெயலலிதா பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளார்

இலங்கையில் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 250க்கும் அதிகமானோரையும் அவர்களது 81 விசை படகுகளையும் மீட்பதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளவேண்டுமென வற்புறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

டிசம்பரில் மட்டும் ஆறு முறை தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருப்பதாக ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறுகிறார்.

இவ்வாறு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும்போதும் தாக்கப்படும்போதும் சுடப்படும்போதும் இந்தியா உரிய பதிலடி கொடுக்காத காரணத்தாலேயே இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டன என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

இருநாட்டு மீனவர்களுக்கிடையே எதிர்வரும் ஜனவரி 20ஆம் நாளன்று சென்னையில் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவிருப்போர், கூட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விபரங்களை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்திவிட்டதாகவும், அதற்கான பதிலுக்காக தாம் காத்திருப்பதாகவும் ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்