BBC navigation

திமுகவின் தேர்தல் கூட்டணி பற்றி தொடரும் ஊகங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 டிசம்பர், 2013 - 18:42 ஜிஎம்டி

திமுகவின் தேர்தல் கூட்டணி பற்றி தொடர்ந்தும் ஊகங்களே உலாவுகின்றன

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரசுடனோ பாரதீய ஜனதாவுடனோ திமுக தலைவர் கருணாநிதி கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று தனது கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியதாக கருணாநிதி குடும்பத்தினரால் நடத்தப்படும் கலைஞர் தொலைக்காட்சி கூறியிருக்கிறது.

திமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் உலவும் வேளையில், இன்று ஞாயிற்றுக்கிழமை கட்சியின் பொதுக்குழு சென்னையில் கூடியது.

பொதுக்குழு நடவடிக்கைகளை நேரடியாகக் காண செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை.

அங்கு பேசிய பலரும் அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில் மத்திய அரசிற்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தும் திமுகவை மத்திய அரசு கைவிட்டது, பழிவாங்கிவிட்டது என்ற ரீதியில் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

அத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கின்றனர் எனத் தெரிகிறது.

கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவர் கருணாநிதிக்கும் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் வழங்கும் தீர்மானம் ஒன்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நிறைவுரையாற்றிய கருணாநிதி, ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் திமுகவிற்கு அவப்பெயர் உருவாகக் காங்கிரஸ் காரணமாயிருந்தது, ஆ.ராசாவுக்கு களங்கம் கற்பித்தது, அவரும் மகள் கனிமொழியும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது, அத்தகைய கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

அதேநேரம், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாமா என்ற கேள்வி எழுப்பியபோது, 'வாஜ்பேயி காலகட்டத்தில் அக்கட்சியுடன் கைகோர்த்தது உண்மைதான். இன்று நிலை வேறு அதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்' என கருணாநிதி கூறியதாக கலைஞர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஆனால், செய்தியாளர்களிடம் பேசுகையில் கருணாநிதி கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.