"நீதிபதி கங்குலி பெண் வழக்கறிஞரிடம் ஏற்கமுடியாத விதமாக நடந்துகொண்டார்"

  • 5 டிசம்பர் 2013
இந்திய உச்சநீதிமன்றம்
இந்திய உச்சநீதிமன்றம்

தன்னிடம் பயிற்சிக்கு வந்த பெண் வழக்கறிஞரிடம் இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ கே கங்குலி ஏற்கமுடியாத பாலியல் ரீதியில் நடந்துகொண்டதற்கான முகாந்திரம் இருந்ததாக, இது குறித்து விசாரித்த மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குழு தெரிவித்திருக்கிறது. ஆனால் நீதிபதி கங்குலி மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பா சதாசிவம் அறிவித்துள்ளார்.

இந்த குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதியன்று கங்குலி உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இல்லை என்பதால், அவர் மீது உச்சநீதிமன்றம் தானாக நடவடிக்கை எடுக்கத்தேவையில்லை என்றும் நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். ஏ கே கங்குலி தற்போது மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ளார். அவர் அந்த பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஒரு பக்கம் கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், அவர் அந்த பதவியிலிருந்து விலகத் தேவையில்லை என்கிற ஆதரவுக் குரல்களும் ஒலித்து வருகின்றன.

சம்மந்தப்பட்ட பெண் வழக்கறிஞர் இந்த சம்பவம் குறித்து முதலில் தனது வலைப்பூவில் எழுதியிருந்தார். அதை இந்திய தினசரி ஒன்று செய்தியாக வெளியிட்டதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் குழுவை இந்திய தலைமை நீதிபதி நியமித்தார்.

அந்த பெண்ணிடமும், நீதிபதி கங்குலியிடமும் நேரில் விசாரித்த இந்த நீதிபதிகளின் குழு தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் கடந்த வாரம் அளித்திருந்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும், அதன் மீதான தனது முடிவையும் தலைமை நீதிபதி சதாசிவம் இன்று வியாழக்கிழமை பகிரங்கமாக வெளியிட்டார்.

தன் மீதான புகார்கள் பொய்யானவையென்று நீதிபதி கங்குலி கடுமையாக மறுத்திருந்தார். அதேசமயம், நீதிபதி கங்குலி மீதான புகார்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு பெண்ணிய செயற்பாட்டாளர்களும், பெண் உரிமைகளுக்கான அமைப்புக்களும் குரல் கொடுத்து வருகின்றன.