தாது மணல் எடுப்பதற்கு எதிராக மீனவர் போராட்டம்

  • 5 செப்டம்பர் 2013

கடலோர தாது மணல் ஆலைகளை மூடக்கோரி நெல்லை மாவட்டம், உவரி கல்லறை தோட்டம் முன்பு, மீனவர் விடுதலை இயக்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஒன்றை புதனன்று (04.09.2013 ) துவக்கி தொடர்ந்து நடத்திவருகிறார்கள்.

அரசியல் செல்வாக்குடன் குறிப்பிட்ட ஐந்து மணல் ஆலைகள் ஏறக்குறைய கடந்த 25 ஆண்டுகளாக சட்டவிரோதமாக கடலை ஆழப்படுத்தி கனிம வளத்தை கொள்ளையடித்து வருவதாக குற்றம் சாட்டுகிறார் இந்த உண்ணாவிரதத்தை முன்னின்று நடத்திவரும் மாநில மீனவர் விடுதலை இயக்கத் தலைவர் அந்தோனிராய்.

தூத்துக்குடியில் பெரியசாமிபுரம், வேம்பாறு பகுதியில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சட்ட விரோதமாக கனிம வளங்களை கொள்ளையடித்தது குறித்து ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர், அவரது ஆய்வு நடவடிக்கை நடத்திய அன்றே இடமாற்றம் செய்யப்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய அந்தோணிராய், தமிழக ஆளும்கட்சியின் இந்த செயல்காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் தமது எல்லையில் நடந்த தாது மணல் கொள்ளை குறித்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

பல்வேறு இயக்கங்கள், மீனவ அமைப்புகள் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் மணல் ஆலைகளுக்கு தமிழக அரசு துணை நிற்பதாக சந்தேகம் வெளியிட்ட அந்தோனிராய், தமிழக காவல்துறை அதிகாரிகளும் மணல் ஆலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, தங்களின் போராட்டத்தை ஒடுக்க முயல்வதாக புகார் கூறினார்.

தாது மணல் கொள்ளை தடுக்கத்தவறியதுமட்டுமல்லாமல், தற்போதைய அதிமுக அரசு அவர்களுக்கு துணைபோவதாகவும் இதன் ஒருபகுதியாக மணல் ஆலைகளை எதிர்க்கிறவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், தாதுமணல் கொள்ளை தடுக்கப்படும்வரை தமது போராட்டமும் தொடரும் என்றும் அந்தோணிராய் தெரிவித்தார்.