BBC navigation

உணவுப் பாதுகாப்பு மசோதா: ஜெ. சாடலுக்கு கருணாநிதி பதில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 ஆகஸ்ட், 2013 - 11:43 ஜிஎம்டி
கருணாநிதி

திமுக தலைவர் மு கருணாநிதி உணவுப் பாதுகாப்பு மசோதாவை தனது கட்சி ஒருபோதும் ஆதரித்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவ்வாயன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உணவுப் பாதுகாப்புச் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் அதனை எதிர்த்து ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த அளவில் மூன்று மாதங்கள் வாய் மூடி இருந்ததே தமிழகத்திற்கு முதலமைச்சர் செய்த பெரிய துரோகம்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவனின் பேட்டியை மட்டும் மேற்கொள்காட்டி ஜெயலலிதா அறிக்கை விடுவது அநாகரிகமான செயல் எனக் கூறியிருக்கும் கருணாநிதி, உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போது, திமுக உறுப்பினர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிப்பார்கள் என்று கடந்த மாதமே செய்தியாளர்களிடம் தான் தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உணவுப் பாதுகாப்பு மசோதாவைப் பொறுத்தவரை தங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் இளங்கோவனோ ”இந்தச் சட்டம் சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஏழைகள் மற்றும் சாதாரண மக்களுக்கு பயனளிக்கக் கூடிய இந்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?" எனக் கேட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்தே முதல்வர் தனது கண்டன அறிக்கையினை விடுத்திருந்தார்.

காங்கிரஸ் இது அடித்தட்டு மக்களுக்கு குறைந்த பட்ச உணவுத் தேவைகளை உறுதி செய்யும் மசோதா எனக் கூறிவருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியிருக்கும் சூழலில், உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறிய பின் நாடாளுமன்றத் தேர்தல்களை சந்திப்பது உசிதமாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் கருதுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக அம்மசோதாவை ஆதரிக்க மறுப்பது மசோதா நிறைவேறுவதை மட்டுமல்ல, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களின்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவாவதையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்கின்றனர் நோக்கர்கள்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.