BBC navigation

செத்துப் பிழைக்கலாம்; உயிரோடிருந்தும் இறக்கலாமா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஜூன், 2013 - 11:22 ஜிஎம்டி
  • இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உயிரோடிப்பவர்கள் பலருக்கு அரசாங்கத்திடம் இருந்து இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அந்த முதியவர்களின் சொத்துக்களை தாம் அபகரிக்க வேண்டும் என்பதற்காக மனசாட்சியில்லாத உறவுக்காரர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளனர். தான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் இப்படத்திலுள்ள 78 வயதாகும் திராஜி தேவி. உயிரோடு இருந்தும் இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிலரின் அவல நிலையை பிரதிபலிக்கும் புகைப்படங்களை அர்கதிரிப்தா சக்ரபொர்த்தி என்ற புகைப்படக் கலைஞர் எடுத்துள்ளார்.
  • உயிரோடிருந்தும் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்களுக்காக சங்கம் ஒன்றை நடத்துகிறார் லால் பிஹாரி யாதவ். தற்போது 61 வயதாகும் பிஹாரி யாதவுக்கு வெறும் 15 வயதிருந்தபோதே அவர் இறந்துவிட்டதாக சான்றிதழ் பெற்று அவரது நிலத்தை சொந்தக்காரர் ஒருவர் அபகரித்திருந்தார். இவர் தனக்குத் தானே இறுதிச் சடங்கு ஒன்றை நடத்தி தனக்கு நடந்த அவலத்தை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
  • தனக்கு நேர்ந்தது வேறு பலருக்கும் நடந்துள்ளது என்று உணர்ந்த யாதவ், ஆயிரக்கணக்கானோருக்கு சட்டவிரோதமாக இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது தொடர்பில் போராட இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்.
  • ஹிந்தியில் 'ம்ரிதக் சங்' அதாவது இறந்தோர் சங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பலர் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று நீதிமன்ற உத்தரவு வாங்கி அவர்களுக்கு தம்முடைய சொத்தும் மரியாதையும் கிடைக்க வழிசெய்திருந்தது.
  • இந்தப் படத்திலுள்ள 61 வயது அன்சார் அகமதுவும் அவருடைய மனைவியும் உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக சான்றிதழ் வாங்கப்பட்டது, பின்னர் நீதிமன்றத்தில் நெடுநாள் போராடி உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை இவர்கள் நிரூபித்திருந்தனர். கேட்கும் திறனை இழந்துவருகின்ற அன்சாரின் மனைவிக்கு சிகிச்சை செய்துகொள்வதற்குக்கூட அவரகளிடம் பணம் இல்லையாம்.
  • அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு இறப்புச் சான்றிதழ் வாங்கி தனது நிலத்தை எடுத்துக்கொண்ட சகோதரனிடம் இருந்து அந்த நிலத்தை தன்னால் திரும்பப் பெறவே முடியவில்லை என்று அன்சார் கூறுகிறார்.
  • தான் இறந்ததாக சான்றிதழ் வாங்கி தனது சொத்து அபகரிக்கப்பட்ட நிலையில் பல்த்தான் யாதவ் சாமியாராகப் போனார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடுவதற்கெல்லாம் தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறுகிறார்.
  • காசியில் வாழும் 65 வயது பரஸ் நாத் குப்தா வாடகை வீட்டில் வாழ்கிறார். தான் இறந்துவிட்டதாக சான்றிதழ் வாங்கி தனது பரம்பரை வீட்டை சகோதரன் அபகரித்துக்கொண்டதாக அவர் கூறுகிறார். கொன்றுவிடுவோம் என உறவுக்காரர்கள் அச்சுறுத்துவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
  • எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்தான் பெரும்பாலும் இவ்வாறாக இறந்ததாக சான்றிதழ் பெறப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள். கையெழுத்து போடத்தெரியாதவர்கள் ஆவணங்களில் கைரேகை பதிவு செய்வதும் பொதுவாக சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
  • 73 வயதாகும் பகவான் தாஸ் இறந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும், அதனை மாற்ற அவர் இன்னும் முயன்றுவருகிறார். மாவட்ட நிர்வாகிகள், மாதத்துக்கு ஒரு முறை இப்படியாக "இறந்தவர்களை" சந்தித்து நிலத் தகராறு பற்றிய புகார்களைப் பெறுகின்றனர்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.