பிணை வழங்கப்பட்டும் வெளியே வர 19 ஆண்டுகள்

  • 22 மே 2013
பிணை கிடைத்தது, விடுதலை கிடைக்க 19 ஆண்டுகள்

இந்தியாவில் பிணை வழங்கப்பட்ட ஒரு பெண் கைதி, சிறையிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்ட நிகழ்ச்சி குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய் குமார் என்ற பெண், கர்ப்பமாயிருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தான் குற்றமற்றவர், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியிருந்தார்.

அவரது கணவர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு ஒரு சிறிய ஜாமின் தொகை கட்டி பிணையில் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் இந்தத் தொகை கட்டப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

விஜய் குமார் இதற்கிடையே சிறையிலேயே ஆண் குழந்தை ஒன்றைப் பிரசவித்தார்.

இந்தக் குழந்தை சிறை அதிகாரிகளால் வளர்க்கப்பட்டுவந்தது.

அவரது குழந்தை சிறையில் இருந்த தனது தாயைப் பார்த்து வந்தான். இறுதியாக. தாயைப் பிணையில் விடுவிக்க தேவையான பணத்தையும் திரட்டிக் கட்டினான். இந்த மாதம் முன்னதாக விஜய் குமாரி விடுதலை செய்யப்பட்டு இப்போது தனது மகனுடன் வாழ்கிறார்.