BBC navigation

தர்மபுரி: வீடு எரிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வெட்ட வெளியில்...

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 நவம்பர், 2012 - 17:05 ஜிஎம்டி
சம்பவம் நடந்த இடம்

வீடுகளோடு சில வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

தமிழகத்தின் தர்மபுரியில் உயர்சாதியினரால் வீடுகள் சூரையாடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வெட்ட வெளியில் தங்கியுள்ளனர்.

தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வன்னியர் இனப் பெண்ணை திருமணம் செய்ததை அடுத்து பிரச்சினை ஏற்பட்டது.

மணமகன் வசிக்கும் நத்தம் காலனிப் பகுதியில் இருந்த சுமார் 300 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தலித் மக்களின் உடமைகளும் சூரையாடப்பட்டன.

சம்பவம் நேற்று முன் தினம் நடந்தும் இன்னமு சுமூக நிலை திரும்பவில்லை என்று அங்கிருப்போர் கூறுகின்றனர்.

ஒலி வடிவில்...

தர்மபுரி சாதி வன்முறை: வீடிழந்தவர்கள் வெட்ட வெளியில்..

தமிழகத்தின் தர்மபுரியில் உயர்சாதியினரால் வீடுகள் சூரையாடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வெட்ட வெளியில் தங்கியுள்ளனர்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஒரு மைதானத்தில் சுமார் 1500 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் உணவு உதவிகளை வழங்கியுள்ளனர்.

அரசு அதிகாரிகள் அளித்த உணவு மற்றும் மாற்றுத் துணி போன்ற உதவிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட தலித் பெண்மணி செல்வி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பனை இலையில் வைத்துதான் உணவு சாப்பிடுவதாகவும், சாலையோரத்தில் உறங்குவதாகவும் அவர் கூறினார்.

புதன்கிழமை மாலை வன்னியர்கள் ஒரு பெருங் கூட்டமாக வந்து வீடு வீடாகச் சென்று பொருள்களை சூறையாடி விட்டு அதன் பிறகு வீடுகளை தீயிட்டுக் கொளுத்திவிட்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் தாழ்த்தப்பட்டோர் வாழும் காலனியில் அதிக அளவிலான ஆண்கள் இருக்கவில்லை என்றும் அங்கு இருந்த அனைவரும் தப்பி ஒடிவந்ததாகவும் அவர் கூறினார்.

நத்தம் கிராமத் தலைவரான சக்தி, 4 மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதலை தடுக்குமாறு காவல்துறைக்கும், தீ அணைப்புத் துறைக்கும் பல முறை அறிவிப்பு கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் உதவவில்லை என்றும் தமிழோசையிடம் புகார் தெரிவித்தார்.

அங்குள்ள தலித் மக்கள் அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்துக்கு சென்று கூலி வேலை பார்த்து பொருளாதார ரீதியில் வன்னியர்களை விட சற்றே முன்னேறிய நிலையில் இருப்பது ஜாதி உணர்வுகளை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் தாக்குதல் காரணமாக சுமார் 300 வீடுகள் முற்றாக தேசமடைந்து விட்டன. இதில் ஒரு சில வீடுகள் மட்டுமே ஒலை வீடுகள் என்று கூறப்படுகிறது.

வீடுகளுக்கு தீ வைத்தவர்கள், வீட்டில் இருந்து பணம், நகை போன்ற பொருட்களை சூறையாடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அங்கே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பண உதவி அளிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் பிபிசியிடம் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக 92 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.