ஏர்செல்-மேக்ஸிஸ் பங்கு விற்பனை: விசாரணை நிலவரம் என்ன?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 நவம்பர், 2012 - 15:32 ஜிஎம்டி

நெருக்கடியில்!

ஏர்செல் தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்ற விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்குத் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அது தொடர்பான விசாரணையை நிறைவு செய்துவிட்டதாக, சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், மலேசியாவில் இதுதொடர்பாக விசாரணை நடத்த அங்கு அரசியல் செல்வாக்கும் பணபலமும் கொண்ட ஒருவர் முட்டுக்கட்டை போடுவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஏர்செல் நிறுவனம், இந்தியாவில் மேலும் பல தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்த அனுமதி கோரி 2004-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படவில்லை. 2006-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம் வாங்கிய நிலையில், ஏர்செல் நிறுவன விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தயாநிதி மாறனின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் பங்குகளை விற்க, அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தயாநிதி மாறன் நிர்பந்தித்ததாக ஏர்செல் நிறுவனத்தின் சிவசங்கரன் புகார் கூறினார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ புதன்கிழமை தாக்கல் செய்தது. அதி்ல், இந்த வழக்குத் தொடர்பாக இந்தியாவில் விசாரணையை நிறைவு செய்துவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மொரிஷஸ் மற்றும் மலேசியாவில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்திய உச்சநீதிமன்றம்

தாமதம் ஏன்?

குறிப்பாக, மலேசியாவில் விசாரணையைத் தொடர்வதற்கு, அங்கு அரசியல் செல்வாக்கும் பணபலமும் படைத்த ஒருவர் முட்டுக்கட்டையாக இருப்பதாக சிபிஐ வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்படியானால், அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுங்கள் என நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் அறிவுறுத்தியது. அதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறு வேணுகோபால் வேண்டுகோள் விடுத்தார்.

தாங்கள் இதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை, தூதரகம் இதற்கு உதவ வேண்டும். அவ்வாறு உதவி செய்யாவிட்டால் நீதிமன்றத்திடம் சொல்லுங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஏர்செல் நிறுவன பங்குகள் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு வி்ற்கப்பட்டதற்கு கைமாறாக, தயாநிதி மாறனின் சகோதரர் நடத்தும் சன் குழுமத்தில் மேக்ஸிஸ் நிறுவனம் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த முதலீடு, மொரிஷஸை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில், ஏர்செல் நிறுவன பங்குகள் மாற்றப்பட்டதற்கும் சன் குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டதற்கும் இணைப்பு இருப்பது பூர்வாங்கமாகத் தெரிய வருவதாகவும், ஆனால் அது விசாரணையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.