கூடங்குளம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 அக்டோபர், 2012 - 16:52 ஜிஎம்டி

கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள் குடியிருந்தால், அவர்களை உரிய இழப்பீடுகளுடன் மாற்று இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, கூடங்குளம் அணு உலையைச் சுற்றி இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்களை வேறு இடத்தில் குடியமர்த்தி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள். அதற்கு, மத்திய அரசின் சார்பில் பதிலளித்த கூடுதல் சொலிசிடர் ஜெனரல் மோகன் பராசரன், இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் யாரும் குடியிருக்கவில்லை என்றும், அவர்கள் வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டு, இரண்டு கிலோ மீட்டரில் சுற்றுச் சுவரும் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அரசின் கருத்தை மறுத்தார். அணு உலையில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள்ளேயே மக்கள் இன்னும் குடியிருப்பதாகத் தெரிவித்தார்.

அவ்வாறு மக்கள் இருந்தால், அவர்களை வேறு இடத்தில் குடியமர்த்தி உரிய இழப்பீடு தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

மேலும், கூடங்குளம் அணு உலைக்கு கடல்நீரைத்தான் பயன்படுத்த இருப்பதாகவும், பேச்சிப்பாறை அணை நீரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும் மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடல்நீரை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதா, பயன்படுத்திய நீரை எப்படி வெளியற்றப் போகிறீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் வெப்பநிலை 7 டிகிரி செல்ஸியாகத்தான் இருக்கும் என்றும், ஐந்து டிகிரி செல்சியஸ் எனக் கூறவில்லை என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அணுக்கழிவுகளை எப்படிக் கையாளப் போகிறீர்கள், அதனால் எத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுனாமி ஆபத்து தொடர்பான வாதத்தின்போது, தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது, அலையின் சீற்றம் அதிகபட்சமாக நாலரை மீட்டர் வரைதான் இருந்ததாகவும், அதிகபட்சமாக ஐந்தரை மீட்டருக்கு மேல் வராது என்றும், கூடங்குளம் அணு உலை 7.4 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கரு்ததுக்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

`மக்கள் மன்றம்தான் பெரிது'

கூடங்குளம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு தோற்றாலும், ஜெயித்தாலும், மக்கள் மன்றம்தான் பெரிது என்று தெரிவித்துள்ளார் வழக்குத் தொடர்ந்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.