BBC navigation

தேர்தல் முறைகேடு: ப.சி. எதிராக நவம்பர் 1 வழக்கு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 அக்டோபர், 2012 - 15:05 ஜிஎம்டி
நிதியமைச்சர் ப.சிதம்பரம்

தேர்தல் முறைகேடு வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு சிதம்பரம் தள்ளப்பட்டுள்ளார்.

நிதியமைச்சர் ப. சிதம்பரம் மீதான தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நவம்பர் 1 முதல் துவங்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு, காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ப. சிதம்பரத்தை எதிர்த்து அதிமுக வேட்பாளராக ராஜகண்ணப்பன் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு குறிப்பிட்ட சுற்றில், தனக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை, சிதம்பரம் தனக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டதாகக் கூறி முறைகேடு செய்ததாலேயே தான் தோல்வியடைந்துவிட்டதாக ராஜகண்ணப்பன் குற்றஞ்சாட்டுகிறார்.

அதனால் சிதம்பரத்தின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் வெள்ளியன்று சிதம்பரம் மீதான தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்டன.

அடுத்ததாக, நவம்பர் 1-ம் தேதி முதல் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை துவங்கும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு, சிதம்பரத்துக்கு எதிரான வழக்கில் ஒரு முக்கியக் கட்டமாகப் பார்க்கப்படுகிறது. அவர் இந்த விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஜெயலலிதா அவர்கள், தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி தில்லுமுல்லு வெற்றி என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.