பெண்களுக்கான நிலைமையில் மிக மோசமான இடத்தில் இந்தியா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 ஜூன், 2012 - 12:49 ஜிஎம்டி
பெண்களின் கல்வி, தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட தகவல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன

பெண்களின் கல்வி, தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட தகவல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன

உலகில் முன்னேற்றம் கண்டுவரும் மற்றும் செல்வந்த நாடுகள் மட்டத்தில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றில், பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மிக அடிமட்டத்தில் இருக்கின்ற நாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபௌண்டேசன் அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் பெண்களின் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

உலகில் அபிவிருத்தியடைந்த மற்றும் பொருளாதார ரீதியான முன்னேற்றம் கண்டுவரும் 19 நாடுகள் பற்றி, குறிப்பாக மெக்ஸிக்கோ,இந்தோனேசியா, பிரேசில், மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பற்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் எதுவும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை.

இந்தியாவில் நடந்துவரும் சிறுவயது திருமணங்கள், சீதனக்கொடுமைகள், வீட்டில் நடக்கும் வன்முறைகள், பெண் சிசுக் கருக்கொலை உள்ளிட்ட விவகாரங்களால் தான் இந்தியா இந்த நாடுகளின் பட்டியலில் பெண்கள் நலனில் மிக அடிமட்டத்தில் இருக்கின்றது.

இந்தியாவில் வீட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட சட்டம் முன்னேற்றப் போக்கைக் காட்டிவருவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சவுதியிலும் பார்க்க கீழ் மட்டத்தில்

ஆனால் அங்கு சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டப்படும் வன்முறைகள், குறிப்பாக வருமானம் குறைந்த வறிய குடும்பங்களில் தாராளமாகக் காணப்படுவதாகத் தான் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கும் இதுவரை சந்தர்ப்பம் கிடைக்காதிருக்கின்ற சவுதி அரேபிய தேசத்தை விடவும்கூட இந்தியா பெண்களுக்கான அந்தஸ்து மற்றும் அங்கீகாரத்தில் கீழ் நிலையில்தான் இன்னும் இருக்கிறது என்பது ஆச்சரியத்துக்குரிய விடயம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சமூகத்தில் பெண்களுக்கு உள்ள அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் என்பது அவர்களின் வர்க்கம் மற்றும் செல்வத்தைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

அங்கும் நன்றாகப் படித்த, தொழில்புரிகின்ற மேற்குல வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்ற, சுதந்திரத்தை அனுபவிக்கின்ற மேல்தட்டு வர்க்கப் பெண்களும் தாராளமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

அங்கு 1960களிலேயே அந்த நாடு பெண்ணொருவரை பிரதமராக்கியிருக்கிறது. இப்போதுகூட, பெண்ணொருவர்தான் நாட்டின் குடியரசுத் தலைவராகவும் இருக்கிறார்.

ஆனால் இந்த நிலைமைகள் பின்தங்கிய கிராமங்களிலும் வளர்ச்சிக்குறைந்த மாநிலங்களிலும் அப்படியே தலைகீழாகத்தான் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபெளண்டேஸனின் ஆய்வுப்படி, பெண் நலன்கள் பற்றிய விடயத்தில் கனடாதான் மிகச்சிறந்த நாடாக இருக்கிறது.

அடுத்தபடியாக ஜெர்மனியும், பிரிட்டனும் இருக்கின்றன. அமெரிக்கா பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது.

.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.