
சோனியா காந்தி
இந்திய நடுவணரசில் ஆட்சி செய்யும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, பாதுகாப்பு காரணங்களை காட்டி தனது வருமான வரி தொடர்பான தகவல்களை தர மறுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர் வி கோபாலகிருஷ்ணன் என்பவர் இந்தத் தகவல்களை கேட்டிருந்தார்.
அவர் கோரிய தகவல்களை அளிப்பதன்மூலம் பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்கிற காரணத்தை காட்டி அவர் கோரிய தகவல்களைத் தரமுடியாது என்று சோனியாகாந்தி பதிலளித்திருக்கிறார்.
தனக்கு அரசியல் சார்பு எதுவும் இல்லை என்று கூறும் கோபாலகிருஷ்ணன், தனது முயற்சிகளை தொடரப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
2000 ஆம் ஆண்டு முதல் கடந்த பத்து ஆண்டு காலத்திற்கான சோனியா காந்தியின் வருமான வரி தகவல்களை அளிக்கும்படி இந்திய அரசின் வருமானவரித்துறையிடம் கோபாலகிருஷ்ணன் கோரியிருந்தார்.
அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். அதைத்தொடர்ந்து சோனியா காந்தியிடம் தமது வருமான வரி குறித்த தகவல்களை அளிக்கும்படி வருமானவரித்துறை கோரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வருமானவரித்துறை அனுப்பிய கோரிக்கைக்கு சோனியா காந்தி அளித்த பதிலில், பொதுவாழ்க்கையில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பது என்கிற போர்வையில், இத்தகைய தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்புக்கு அளிப்பதானது தனிமனித அந்தரங்கத்தில் தேவையற்ற தலையீடாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார்.
இத்தகைய தகவல்களை மூன்றாம் தரப்புக்கு தருவதற்கு நியாயமான பொதுநன்மை எதுவும் இல்லை என்றும் சோனியாகாந்தி கூறியிருக்கிறார்.
கோரப்பட்ட தகவல்களை அளிப்பதற்கான மேலதிக பொதுநன்மைக்காரணிகள் எவையும் இல்லை என்று தெரிவித்திருக்கும் வருமானவரித்துறை, இந்த கோரிக்கை தொடர்பான தனது நடவடிக்கையை முடித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.
இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு கோபாலகிருஷ்ணனுக்கு உரிமை இருக்கிறது.








