
இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங், தமிழ் நாட்டில் உருவாகி வரும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கப்படுவது தாமதமாவதற்கு, அமெரிக்காவிலிருந்து இயங்கும் தன்னார்வ நிறுவனங்களே காரணம் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
பிரசித்தி பெற்ற சயின்ஸ் ( அறிவியல்) சஞ்சிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தக்குழுக்கள் இந்தியாவின் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகளைப் புரிந்து கொள்ளவில்லை என்றார் மன்மோஹன் சிங்.
கூடங்குளம் அணு உலைக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அந்த மின் நிலையப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன.
இதே போல இந்தியாவில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்களை அறிமுகப்படுத்துவதற்கும் அமெரிக்க மற்றும் ஸ்காண்டிநேவியப் பகுதிகளிலிருந்து இயங்கும் குழுக்கள் எதிர்த்து வருவதாக மன்மோஹன் சிங் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மரபணு மாற்றியமைக்கப்பட்ட கத்தரிக்காய் பயிரை வணிக ரீதியில் பயிரிடுவதற்கு இந்திய அரசு அனுமதி அளிப்பதை 2010ம் ஆண்டில் ஒத்திவைத்ததற்கு இந்த எதிர்ப்புகளே காரணம். இந்த முடிவு பற்றி குறிப்பிட்ட இந்தியப்பிரதமர், உயிரியல் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு பல பெரும் சாத்தியக்கூறுகளைத் தருகிறது, விவசாய உற்பத்தியை அதிகரிக்க இந்தத் தொழில் நுட்பத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
சீனாவைப் போலல்லாமல், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று மன்மோஹன் சிங் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் வெளிநாடுகளே காரணம் என்று இந்திய அரசியல்வாதிகள், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படுவதற்கு முந்தைய காலகட்டங்களில் கூறிவந்ததைப் போலவே இப்போதைய பிரதமர் மன்மோஹன் சிங்கின் கருத்துக்களும் அமைந்திருக்கின்றன என்று இந்தக் கருத்துக்களை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும் பெண்கள்
ஆனால் மன்மோஹன் சிங் தெரிவித்த இதே போன்ற கருத்துக்களை முன்பே பிரதமர் அலுவலகத்திற்குப் பொறுப்பான துணை அமைச்சர் வி.நாராயணசாமியும் தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
தூத்துக்குடி பகுதியில் இயங்கும் சில தன்னார்வ நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து தூத்துகுடி பகுதியில் இயங்கும் சில தன்னார்வ நிறுவனங்களின் அலுவலகங்களில் மத்திய அரசு அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








