bbc.co.uk navigation

'சென்னையில் ஐவர் போலீஸாரால் சுட்டுக் கொலை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 பிப்ரவரி, 2012 - 10:46 ஜிஎம்டி

சென்னையில்அண்மையில் நடந்த இரு வங்கிக்கொள்ளைகளில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஐந்து பேர் இன்று அதிகாலை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்கள் வேளச்சேரியில் ஓர் அடுக்குமாடிக்குடியிருப்பில் பதுங்கியிருப்பதாகத் தெரிந்து அவர்களைப் பிடிக்கச் சென்றபோது, கொள்ளையர்கள் போலீசாரின் மீது சுட்டதாகவும் தற்காப்பிற்காக போலீசார் திருப்பிச் சுட நேர்ந்ததாகவும் மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி செய்தியாளர்களிடம் பின்னர் கூறினார்.

கொல்லப்பட்டவரில் நால்வர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

கடந்த ஜனவரி 23 ஆம் நாள் பாங்க் ஆப் பரோடா வங்கியின் பெருங்குடிக்கிளையில் புகுந்து ரூ. 20 லட்சத்தை அள்ளிச் சென்றனர். இதில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 14 லட்சத்தை துப்பாக்கிமுனையில் பறித்துச் சென்றனர்.

அடுத்தடுத்து நடந்த அச்சம்பவங்கள் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புலன்விசாரணை செய்ய காவல்துறை 40 தனிப்படைகளை அமைத்தது. கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் வங்கிகளை நோட்டமிடும்போது கணகாணிப்புக் காமிராவில் பதிவாகியது எனக் கூறி நேற்று பிற்பகலில் வீடியோ பதிவை வெளியிட்டனர் போலீசார்.

அதனைப்பார்த்த ஒருவர் கொடுத்த துப்பின் பேரில் வேளச்சேரி பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்த கொள்ளையர்களை முற்றுகையிட்டு, அவர்களை சரணடையுமாறு உத்தரவிட்டதாகவும், ஆனால் அவர்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டதாகவும், இருதரப்பினருக்குமிடையே ஏறத்தாழ ஒருமணிநேரம் மோதல் நிகழ்ந்ததென்றும் இறுதியில் ஐவரும் கொல்லப்பட்டனர் என்றும், போலீசார் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் ஆணையர் திரிபாதி கூறினார்.

அருகாமையிலிருந்தவர்களோ அவ்வாறு துப்பாக்கிக்குண்டுகள் இருபக்கங்களிலிருந்தும் வெடித்த ஒலி எதுவும் கேட்கவில்லை என்றும், ஒரே திசையிலிருந்தே அவ்வாறு ஒலிகேட்ட்தாகவும், தங்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளே சென்று தாளிட்டுக்கொள்ளுமாறு போலீசார் கூறியதாகவும் தெரிவித்தனர்,

மனித உரிமை ஆர்வலர்கள் ''தொடர்ந்து மோதல் மரணம் என்ற பெயரில் தமிழக போலீசார் குற்றவாளிகள் என்று சந்தேகப்படுவோரை சுட்டுக்கொல்கின்றனர். ஏறத்தாழ 75பேர் கடந்த 10 ஆண்டுகளில் கொல்லப்பட்டனர்'' என்றும் கூறுகின்றனர். சட்டத்தை போலீசார் தங்கள் கையில் எடுத்துக்கொள்வது ஆபத்தான போக்கு எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

மரணங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடைபெறும் எனவும் மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்தார்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.