
கொச்சி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றதாக இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தப் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரனீத் கெளரை, இத்தாலிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஸ்டெஃபான் டி மிஸ்துரா புதன்கிழமை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
இரு நாடுகளுக்கிடையே ராஜாங்க ரீதியாக முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், முயற்சிகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில், அதில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்த நிலையில், இத்தாலிய அமைச்சர் வந்திருக்கிறார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய இத்தாலிய அமைச்சர், அந்நாட்டின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரின் சார்பில் தான் இன்றைய சந்திப்பை நடத்தியதாகத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு மிகவும் அவசியம் என்று தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ``இந்திய அமைச்சருடன் நடத்திய சந்திப்பில், மூன்று விடயங்கள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டது. முதலாவதாக, இரண்டு இந்தியப் பிரஜைகள் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டாவதாக, அந்தச் சம்பவம் நடந்தது சர்வதேசக் கடல் எல்லையில். அதுதொடர்பான சரியான விவரங்கள் விசாரணைக்குப் பிறகு தெரிய வரும். மூன்றாவதாக, உண்மை வெளிவர வேண்டும் என விரும்புகிறோம். அதன் மூலம், இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு காண முடியும்’’, என்றார் இத்தாலிய அமைச்சர் மி்ஸ்துரா.
சம்பவம் நடந்தது சர்வதேச கடல் எல்லையில் என இத்தாலி கூறிவரும் நிலையில், அதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரனீத் கெளர் கூறும்போது, ``சட்ட ரீதியான வாதத்தைப் பொருத்தவரை, அவர்கள் அவர்களது விளக்கத்தைச் சொல்கிறார்கள். இந்தியா தனது விளக்கத்தைச் சொல்கிறது. இன்றைய நிலையில், இரண்டு இத்தாலிய வீரர்கள் இந்திய மண்ணில் இருக்கிறார்கள். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்திய நீதிமன்றம் முடிவு செய்யும். இந்திய சட்டப்படிதான் நாங்கள் செயல்படுவோம். அதே நேரத்தில், சுயாதீனமான இந்திய நீதித்துறை, சரியான முடிவை எடுக்கும் என்று இத்தாலிய அமைச்சரிடம் உறுதியளித்திருக்கிறேன்’, என்றார் பிரனீத் கெளர்.
கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இத்தாலிய வீரர்களுக்கு எதிராக சட்ட ரீதீயான நடவடிக்கையை கேரள அரசு முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.
தங்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி இத்தாலிய வீரர்கள் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கொல்லப்பட்ட மீனவர்களில் ஒருவரான வெலன்டைன் என்பவர் சார்பில் அவரது மனைவி கேரள உயர்நீதிமனறத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அதில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வாங்கித் தர வேண்டும் எனக் கோரியிருந்தார். அந்த விசாரணையின்போது, இத்தாலிய கப்பல் நிறுவனம் 25 லட்சம் ரூபாய் வங்கி உத்தரவாதத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.








