
ரயில் விபத்தில் அகப்பட்ட ஒருவர் தூக்கிச் செல்லப்படுகிறார்
இந்தியாவில் ரயில்வே பாதுகாப்பு மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய அரச அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மோசமாக இருப்பதாலேயே ஆண்டொன்றுக்கு ஆயிரக்கானவர்கள் ரயில் விபத்துகளில் பலியாக நேருகிறது என்றும், இந்த விபத்துகளை தடுக்க ரயில்வே நிர்வாகம் தவறி விட்டது என்றும், இந்திய அரசின் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இருப்புப் பாதைகளைச் சுற்றி சரியான வேலிகள் போடப்படாதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், 15,000 பேர் ரயில்களில் அடிப்பட்டு இறந்து போக நேரிடுகிறது என்று ரயில்வே பாதுகாப்பு குறித்த அந்த உயர்மட்டக் குழுவின் அறிக்கை கூறுகிறது.
இத்தகைய இறப்புக்களில் பாதி மும்பையில் ஏற்படுகின்றன என்றும், அங்கு பொதுமக்கள் ரயில் பாதைகளை கடந்தது செல்ல போதிய வழிகள் இல்லாததே இதற்கு காரணம் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
விபத்துகளை தடுக்கும் நோக்கில், எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இந்திய ரயில்வேத்துறைக்கு முன்னர் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி அந்த குழு விமர்சித்துள்ளது.
பெருமளவிலான மக்கள் படுகொலை செய்யப்படும் நடவடிக்கை என அந்த அறிக்கை இதனை விமர்சித்துள்ளது. அதனைத் தடுக்க உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலான முதலீடுகள் தேவை எனவும் அது தெரிவித்துள்ளது.








