
சசிகலா- ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அவர் அண்மைக்காலம் வரை தன் உடன்பிறவா சகோதரி என்றழைத்துவந்த சசிகலா இன்று சனிக்கிழமை சாட்சியமளித்தார்.
வழக்குடன் தொடர்புடைய அனைத்து செயல்களுக்கும் தானே பொறுப்பு என்று இதன்போது சசிகலா கூறியதாக பெங்களூரிலிருந்து வெளியாகும் செய்திகள் கூறுகின்றன.
1991-1996 கால கட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருவாயை மீறி 66 கோடி ரூபாய் அளவு சொத்து குவித்ததாக பின்னர் வந்த திமுக அரசால் வழக்கு தொடரப்பட்டது.
தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கில் ஜெயலலிதா சாட்சியமளித்து முடித்துவிட்டார்.
அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனையவர்களான சசிகலா, அவரது உறவினர் இளவரசி, மற்றும் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோரின் சாட்சியங்களை பதிவு செய்யும் படலம் துவங்கியிருக்கிறது.
‘வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்ப்ரைசஸ் ஆகிய இரு நிறுவனங்களை முழுமையாக நிர்வகித்து வந்ததாகவும், ஜெயலலிதா செயல்படாத பங்குதாரராக மட்டுமே இருந்தார், அலுவலகப் பணிகளில் அவருக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை’ என்றும் சசிகலா கூறியதாக அரச தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா செய்தியாளர்களிடம் கூறினார்.
'கண்கலங்கியது'
பல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது எல்லாவற்றிற்கும் தானே பொறுப்பு என்று கூறியவண்ணம் கண்ணீர்வடித்ததாக செய்திகள் கூறுகின்றன.
ஆனால் அவரது வழக்கிறிஞரோ சசிகலாவிற்கு கண்ணில் ஒரு கோளாறு அதன்விளைவாகவே நீர்வடிந்தது என செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
சசிகலா 40 கேள்விகளுக்கு பதிலளித்திருப்பதாகத் தெரிகிறது. இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. எனவே அவரிடம் எதிர்வரும் பிப்ரவரி 23 அன்று விசாரணை தொடரும். அதன் பின் மற்றவர்கள் சாட்சியமளிப்பர்.
அண்மையில்தான் சசிகலா ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தைவிட்டு வெளியேறினார். அவரும் அவருக்கு நெருக்கமான பத்துக்கு மேற்பட்டோரும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான திவாகரன் மற்றும் இராவணன் ஆகியோர் பல்வேறு வழக்குக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சசிகலாவின் கணவர் எம்.நடராஜனும் தஞ்சையில் நடைபெற்றுள்ளதாக்க் கூறப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சொத்துகுவிப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் சசிகலா பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.








