bbc.co.uk navigation

தமிழக மீனவர் கொலை: இத்தாலிக்கு எச்சரிக்கை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 பிப்ரவரி, 2012 - 16:04 ஜிஎம்டி
இந்திய மீனவர்கள் (ஆவணப்படம்)

இந்திய மீனவர்கள் (ஆவணப்படம்)

கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து 14 கடல்மைல் தொலைவில் தமிழக மீனவர்கள் இருவர் இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தாலி நாட்டு தூதர் கியாகோமோ மாண்டிஃபோர்ட்டை அழைத்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

சம்பவம் குறித்த விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவேண்டுமென சம்பந்தப்பட்ட இத்தாலியக் கப்பல் அதிகாரிகளுக்கு இத்தாலிய அரசு அறிவுறுத்தவேண்டுமெனவும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது. தூதரும் அவ்வாறு அறிவுறுத்த ஒப்புக்கொண்டதாக புதுடில்லியிலிருந்து வெளியாகும் செய்திகள் கூறுகின்றன.

என்ரிகா லெக்சி எனப்படும் அவ்வித்தாலிய எண்ணெய்க் கப்பலில் இருந்தவர்கள், ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த் கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த ஒரு படகின் மீது சுட்டதில் 48 வயதான் மீனவர் ஜெலெஸ்டின் மற்றும் 19 வயதான அஜித் பிங்க் ஆகியோர் உயிரிழந்தனர்.

தப்பி கரைக்கு வந்தவர்கள் காவல்துறையிடமும், கடலோரப் காவல் படையினரிடமும் எவ்வித முகாந்திரமுமில்லாமல் தங்கள் மீது இத்தாலியக் கப்பலைச் சேர்ந்தவர்கள் சுட்டதாக புகார் கூறியிருக்கின்றனர். பின்னர் கடலோரக் காவற்படையினர் இத்தாலியக் கப்பலை கொச்சிக்கு அழைத்துவந்து, அதன் அதிகாரிகளிடம் விசாரணை நட்த்திவருகின்றனர். பூத்துறை மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என தவறாக நினைத்து, பதட்டத்தில் அப்படகின் மீது சுட்டுவிட்டதாக கப்பலைச்சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர். இத்தாலியத்தூதரோ இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏதோ நிகழ்ந்ததாக் கூறியிருக்கிறார்.

கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சரூபாய் நிவாரணம் வழங்குவதாக, கேரள மற்றும் தமிழக அரசுகள் அறிவித்திருக்கின்றன.

ஜஸ்டினின் உடல் கொல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இளைஞர் பிங்கின் உடல் வியாழனன்று மாலை கன்னியாகுமரிக்கு எடுத்துவரப்பட்டு அங்கே அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே ஆண்டனி சம்பவம் மிக துரதிர்ஷ்டமானது, இது பற்றி தீர ஆய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருக்கிறார்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.