
தமிழக முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினைக் கண்காணிக்க கேரள அரசுக்கு மத்திய அரசு உதவக் கூடாது என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அவ்வப்போது நீர் மட்டத்தினைக் கண்காணிக்க சில கருவிகளை நிறுவுவது குறித்து மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சிற்கும் கேரள் அரசிற்குமிடையே உடன்பாடு கையெழுத்தாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டி, ஜெயலலிதா தனது கடிதத்தில் அத்தகைய முயற்சிகள் மக்களிடையே பீதியைக் கிளப்பும் செயல் என்று குறைகூறியுள்ளார்.
பிரதமர், தொழில்நுட்ப அமைச்சகம் கேரள அரசுடன் உடன்பாடு எதனையும் செய்து கொள்ளக் கூடாது என உத்திரவிட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயவென உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னரே இவ்வாறு கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும், விஷமிகள் எவரும் அணைக்கு சேதம் விளைவித்துவிடாமல் இருக்க, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினை நிறுவவேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையினை வலுப்படுத்துவதாகவே இருக்கிறது கேரளாவின் இத்தகைய முயற்சிகள் என்றும், தமிழக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
மேலும் முல்லை பெரியாறு அணை அதைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் அனைத்துமே தமிழ்நாட்டிற்கே சொந்தமென்றும் அவர் தனது கடிதத்தில் வாதாடுகிறார்.








