bbc.co.uk navigation

ஆபாச படம் பார்த்து அமைச்சர் பதவியிழந்த பாஜகவினர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 பிப்ரவரி, 2012 - 18:59 ஜிஎம்டி
அமைச்சர்களுக்கு எதிரான ஆர்பாட்டம்

அமைச்சர்களுக்கு எதிரான ஆர்பாட்டம்

மொபைல் தொலைபேசியில், ஆபாச வீடியோப் படம் பார்த்ததாக சர்ச்சைக்குள்ளான கர்நாடக மாநில அமைச்சர்கள் மூன்று பேர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

அமைச்சர்கள் லஷ்மண் சவதி மற்றும் சி.சி. பாடீல் ஆகிய இருவரும், கர்நாடக சட்டப்பேரவைக்குள் அமர்ந்தபடி, செவ்வாயன்று ஆபாச வீடியோப் படம் பார்த்துக் கொண்டிருந்ததை, தனியார் தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்து வெளியிட்டதால் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள். அவர்களுக்கு அந்த ஆபாசப் படத்தை அனுப்பிய இன்னொரு அமைச்சர் கிருஷ்ணா பாலேமாரும் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்.

இது, சதானந்த கெளடா தலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசுக்கும், தேசிய பாஜக தலைமைக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சர்ச்சை வெளியானதை அடுத்து, பாஜக தலைவர் நிதின் கட்கரி, கர்நாடக முதலமைச்சர் சதானந்த கெளடா, மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா மற்றும் முன்னாள் முதலமைச்சர் யெதியூரப்பாவுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, அந்த மூன்று அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ளனர்.

பதவி இழந்த பாஜக அமைச்சர் லக்ஷ்மண் சவதி

பதவி இழந்த பாஜக அமைச்சர் லக்ஷ்மண் சவதி

தனது ராஜிநாமா குறித்து, அமைச்சர் சி.சி. பாடீல் கூறுகையில், "நேற்று சட்டப்பேரவைக்குள் என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கிறோம். அந்த விசாரணைக்குப் பிறகு, எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பது தெரியவரும்’’, என்றார்.

கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் தர்மசங்கடம் ஏற்படக்கூடாது என்பதால்தான், தங்கள் பதவியை ராஜிநாமா செய்ததாகவும், கட்சித் தலைமை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் லஷ்மண் சவதி தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை, சட்டப்பேரவை கூடியவுடன், அமைச்சர்கள் பதவி விலகியது குறித்தும், அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டது குறித்தும் அவைக்கு அறிவித்தார் முதலமைச்சர் சதானந்த கெளடா. ஆனால், எதி்ர்க்கட்சியினர் ஆவேசமாகக் கோஷமிட்டார்கள். பதவி விலகினால் மட்டும் போதாது, அந்த மூன்று அமைச்சர்களையும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள்.

இதனிடையே, இந்தப் பிரச்சினை குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு 13-ம் தேதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். ராஜிநாமா செய்த மூன்று அமைச்சர்களும் அந்தக் குழுவிடம் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, அந்த மூன்று பேரும் சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தென் மாநிலங்களில் முதல் அரசாங்கத்தை கர்நாடகத்தில் அமைத்த பாஜகவின் அமைச்சர்கள் பலர் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். முன்னாள் முதல்வர் யெதியூரப்பா உள்ளிட்ட பலர் நில பேர முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் ராஜிநாமா செய்துள்ளனர். தற்போதைய மூன்று பேரையும் சேர்த்து, இதுவரை சர்ச்சைகளில் சிக்கி ராஜிநாமா செய்துள்ள கர்நாடக பாஜக அமைச்சர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.