bbc.co.uk navigation

விண்வெளி அலைக்கற்றை: விசாரணை அறிக்கை மீது நாயர் விமர்சனம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 பிப்ரவரி, 2012 - 16:47 ஜிஎம்டி
மாதவன் நாயர்

மாதவன் நாயர்

எஸ் பேண்ட் எனப்படும் விண்வெளி அலைக்கற்றை விற்பனை தொடர்பிலான ஒப்பந்தத்தில் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவரான ஜி. மாதவன் நாயர், இந்த ஒப்பந்தம் தொடர்பில் நடத்தப்பட்ட உயர்மட்ட விசாரணையின் அறிக்கையிலிருந்து தனக்கு பாதகமான குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் இந்திய விண்வெளித்துறை தேர்ந்தெடுத்து வெளியிட்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.

உயர் அதிகார மீளாய்வுக் குழு வழங்கிய மீளாய்வு அறிக்கையை முழுமையாகவும், உயர் மட்ட ஐவர் குழுவினர் கொடுத்திருந்த விசாரணை அறிக்கையின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் ஆகிய இரண்டு பகுதிகளையும் இந்திய விண்வெளித் துறை நேற்று சனிக்கிழமை இரவு வெளியிட்டிருந்தது.

விண்வெளி அலைக்கற்றை விற்பனை தொடர்பில் இஸ்ரோவின் வியாபார அங்கமான அண்ட்ரிக்ஸ் அமைப்புக்கும் டேவாஸ் நிறுவனத்துக்கும் இடையில் 2005ஆம் ஆண்டு உடன்பாடு ஆகியிருந்த ஒப்பந்தத்தை முறைகேடு புகார்கள் எழுந்ததை அடுத்து அரசாங்கம் பின்னர் ரத்து செய்திருந்தது.

அந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்காக பி. சதுர்வேதி மற்றும் பேராசிரியர் ரொத்தம் நரசிம்ம ஆகியோர் அடங்கிய

உயர் அதிகார மீளாய்வுக் குழுவினையும், அந்த ஒப்பந்தம் தொடர்பில் அதிகாரிகள் ஈடுபட்ட முறைகேடுகள் மற்றும் ஆற்றத் தவறிய கடமைகள் ஆகியவற்றை அடையாளம் காண்பதற்காக இந்திய ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் பிரத்யுஷ் சின்ஹா தலைமையிலான உயர் மட்ட ஐவர் குழுவையும் அரசாங்கம் நியமித்திருந்தது.

நாயரின் குற்றச்சாட்டுகள்

உயர் மட்ட ஐவர் குழுவின் அறிக்கையில் நிறைய இடங்களில் ஒன்றுக்கொன்று முரணான விஷயங்களும் துல்லியமற்ற தகவல்களும் நிறைந்திருப்பதாக மாதவன் நாயர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த அறிக்கையின் குறிப்பிட்ட சில பாகங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வெளியிட்டு தன்னைக் குற்றவாளியாக சித்தரிக்க தனக்குப் பின்னர் இஸ்ரோவின் தலைவராக ஆகியுள்ள கே.ராதாகிருஷ்ணன் முயலுகிறார் என நாயர் பழிசுமத்தியுள்ளார்.

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மோசமான குற்றச்சாட்டுகள் முன்னரே எழுந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது முறையான விசாரணை ஒன்றை அரசாங்கம் நடத்தியிருக்க வேண்டுமே. அரசாங்கம் அவ்வாறான எந்த ஒரு விசாரணையையும் நடத்தாமல் இருப்பது தனக்குப் புதிராக இருக்கிறது என்று நாயர் கூறினார்.

மாதவன் நாயர் உட்பட அண்ட்ரிக்ஸ் டேவாஸ் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு விஞ்ஞானிகளும் இனி எவ்வித அரசு பொறுப்பையும் வகிக்க முடியாது என்று ஒரு வாரம் முன்புதான் அரசாங்கம் தடை விதித்திருந்தது.

அதனை அடுத்து பாட்னாவின் ஐஐடி இந்திய தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் பொறுப்பிலிருந்து மாதவன் நாயர் விலகியிருந்தார்.

விசாரணை அறிக்கை

வெளிப்படைத்தன்மைக்கு இடம் இல்லாமலும், கவன சிரத்தை இல்லாமலும் இந்த ஒப்பந்தத்தில் பல விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று உயர் மட்ட ஐவர் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை உருவாக்கும்போது விண்வெளித்துறை சட்ட நிபுணர்களின் ஆலோசனையோ, நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதலோ பெறப்பட்டிருக்கவில்லை என்றும் இந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஓய்வு பெற்றுவிட்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், மற்றும் ஏ. பாஸ்கர நாராயணா, கே.ஆர். ஸ்ரீதர மூர்த்தி, கே.என். ஷங்கரா ஆகியோர் மீது இந்த முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.