bbc.co.uk navigation

கூடங்குளம்: புதிய நிபுணர் குழு அமைக்க ஜெ. முடிவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 பிப்ரவரி, 2012 - 14:45 ஜிஎம்டி
முதல்வர் ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா

கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்த மக்களின் அச்சங்களை தீர ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்று அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அந்தக் குழுவின் அறிக்கையினை ஒட்டியே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்திற்கு பதிலளிக்கும் போதே ஜெயலலிதா இந்தப் புதிய குழு பற்றி அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு, கூடங்குளம் பிரச்சினையில் தமிழக முதல்வரின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதைப்போன்ற ஒரு கருத்தை ஏற்படுத்தியுள்ளதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

முதலில் அணுமின் நிலையம் அவசியம் என்று கூறிய ஜெயலலிதா, பின்னர் மக்கள் கடுமையாக எதிர்க்கும் சூழலில் மக்களது அச்சங்கள் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறியிருந்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் மக்கள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் மக்கள்

பின்னர் மத்திய அரசு நிபுணர் குழுவொன்றை நியமித்தது. அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவில் அணுமின் நிலையத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். இரு குழுக்களுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

அணுமின் நிலையத்தால் ஆபத்து எதுவுமே இல்லை என்று மத்திய அரசுக்குழு வலியுறுத்தியது. ஆனால் அதன் தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவை என எதிர்ப்பாளர்கள் வாதிட்டனர்.

இனி இந்த இரு குழுக்களும் கூடி விவாதிக்கப்போவதில்லை என்ற சூழல் உருவாயிருக்கும் நிலையில் முதல்வரின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அவர் நியமிக்கவிருக்கும் புதிய குழு மத்திய குழுவின் பரிந்துரைகளை ஆமோதித்தால் அடுத்த கட்டமாக தமிழக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க தயாராகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

எப்படியும் அனைத்து பணிகளையும் முடித்து மின் உற்பத்தித் துவங்க அனுமதிக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.