
எம்.ஒ.எச்.பாரூக்
கேரள மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான, எம்.ஓ.எச்.பாருக் வியாழனன்று காலமானார்.
அவருக்கு வயது 74.
கடந்த சில மாதங்களாக அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வெள்ளி இரவு காலமானார்.
வாழ்க்கை குறிப்பு
எம்.ஒ.எச் என்ற பெயர் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசியல் நோக்கர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று.
புதுச்சேரியின் ஒரு பகுதியான காரைக்காலில் பிறந்த பாருக் , தனது அரசியல் வாழ்வை, காங்கிரஸ் கட்சியில் தொடங்கினார். தனது 27வயதிலேயே சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுவை சட்டப்பேரவையின் சபாநாயகரான பாரூக், 1967-68 காலகட்டத்தில் காங்கிரஸ் முதலமைச்சரானார்.
பின்னர் திமுகவுக்கு கட்சி மாறி, மீண்டும் திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அரசின் முதல்வராக பதவி வகித்தார்.
ஆனால் அவசர நிலை காலகட்டத்தில், மீண்டும் காங்கிரஸில் இணைந்த பாருக், 1977-79 காலகட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த மொரார்ஜி தேசாய் அரசின் , புதுவையை அண்டை மாநிலங்களுடன் இணைப்பது என்ற கொள்கைக்கு எதிராக புதுவையில் நடந்த மக்கள் இயக்கதில் முக்கிய பங்காற்றி, அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசில் மீண்டும் சபாநாயகரானார்.
1985ல் காங்கிரஸ் தனித்து ஆட்சியைப் பிடித்தபோது, மீண்டும் முதல்வரான பாருக், அதன் பின்னர், 1991ல் மத்தியில் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறைக்கான துணை அமைச்சராகவும் சிறிது காலம் பதவி வகித்தார்.
அரசியல் சாதுர்யமிக்கவராகக் கருதப்பட்ட பாருக்கின் அரசியல் வாழ்வில், அவரது காரைக்கால் சகாவான பி.ஷண்முகத்துக்கும் அவருக்கும் இடையே நிலவிய அரசியல் போட்டி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் எப்போதும் கோஷ்டி மனப்பான்மையை வளர்த்தது.
மாநில அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்கு பாருக் செல்லவும், பின்னர் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கவும் இந்த போட்டி அரசியலே காரணமாகக் கருதப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் வகித்த பாருக், பின்னர், தீவிர அரசியலிலிருந்து ஓய்வெடுக்கும் கட்டத்தில், சௌதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகவும், பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தார்.
கடைசியாக கேரள மாநில ஆளுநராகப் பதவி ஏற்று சில மாதங்களுக்குள்ளாகவே, அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.
இறுதிச் சடங்கு
சென்னையிலிருந்து அவரது உடல் புதுச்சேரி, உப்பளம் பகுதியில் இருக்கும் இஸ்லாமிய இடுகாட்டில் அரசு மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் , ஏ.கே.ஆண்டனி, வி.நாராயணசாமி, ஈ.அஹமது, புதுவை லெப்டினண்ட் கவர்னர், இக்பால் சிங், கேரளா முதல்வர் ஊமன் சாண்டி, புதுவை மற்றும் கேரள அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாருக்கின் மறைவை ஒட்டி, கேரளாவிலும், புதுச்சேரியிலும் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கேரளாவில் 7 நாட்களும், புதுச்சேரியில் மூன்று நாட்களும் அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.






