
இந்திய உச்சநீதிமன்றம்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை கூடுதலாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசின் இந்த முயற்சி, அந்த வழக்கையே மூடிவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா மற்றும் அவரது முன்னாள் தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில், ஜெயலலிதா நேரில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதே நேரத்தில், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் ஊழல் ஒழிப்புத்துறையின் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு கோரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது. பின்னர், உச்சநீதிமன்றத்தில் ஊழல் ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.
வெள்ளியன்று அந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் தேசாய் ஆஜரானார். ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையில், வங்கி பாஸ் புத்தகம், வருமான வரி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளவில்லை என்றும் அதனால் கூடுதல் விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
சரமாரி கேள்விகள்
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வரும் இந்த நிலையில், கூடுதல் விசாரணை கோருவது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
கண்காணிப்பு ஆணையர் பொறுப்பில் உள்ள தலைமைச் செயலர் தலைமையில், கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், கூடுதல் விசாரணை கோர முடிவு செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அசோக் தேசாய் தெரிவித்தார்.
ஒரு மாநில அரசின் தலைமைச் செயலர், ஒரு வழக்கில் கூடுதல் விசாரணை செய்யுமாறு எப்படி உத்தரவிட முடியும்? இதுபோன்று எத்தனை வழக்குகளில் கேட்டிருக்கிறீர்கள்? அரசு எப்படிக் கேட்க முடியும்? மாநில அரசுக்கு யாரும் சரியாக ஆலோசனை கூறவில்லையா? மூத்த வழக்கறிஞரான நீங்களே இப்படிக் கேட்கலாமா? என்றெல்லாம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினார்கள்.
மேலும், கூடுதல் விசாரணை நடத்த அனுமதியளித்தால், அந்த வழக்கையே மூடிவிட மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றும் நீதிதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
அந்த மனுவை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரிப்பதாகக் கூறிய நீதிபதிகள், அதற்கு முன்னதாக, ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்த திமுக பொதுச் செயலர் அன்பழகன், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோருக்கு மனுவின் நகல்களை வழங்குமாறு உத்தரவிட்டனர்.







