
ராஜீவ் காந்தி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்திய நடுவணரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி நிராகரித்த பிறகு, அவர்கள் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
தங்களின் கருணை மனுக்கள் மீதான இறுதி முடிவை எடுப்பதில் இந்திய ஜனாதிபதி காட்டிய பல ஆண்டுகால தாமதத்தை காரணம் காட்டி இவர்கள் தங்களின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்கள்.
அவர்களின் மனுக்களை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இவர்களின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு தற்காலிக தடைஉத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்த பின்னணியில் இவர்களின் மனுக்களை எதிர்த்திருக்கும் இந்திய நடுவணரசு, இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொன்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இவர்களை மற்ற குற்றவியல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிட முடியாது என்று வாதாடியிருப்பதாக, தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்காக வழக்காடும் வழக்கறிஞர் சந்திரசேகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதேசமயம், தமிழக அரசு இந்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அனைத்தும் நடுவணரசுக்கே இருப்பதாகவும், தமிழக அரசுக்கு இதில் முடிவெடுக்கும் அதிகாரமில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இவர்களின் மூவரின் மரணதண்டனைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு நீதிமன்றத்தில் இப்படியான பதில் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.








