16 மே, 2008 - பிரசுர நேரம் 11:20 ஜிஎம்டி
பிரபல நடிகர் கமலஹாசன் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் தசாவதாரம் என்கிற தமிழ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கும்படி, உலகளாவிய ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கம் என்கிற அமைப்பை சேர்ந்த கோவிந்த ராமானுஜதாசா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
தசாவதாரம் திரைப்படத்தின் விளம்பர காட்சிகளில் காட்டப்படும் காட்சிகள், வைஷ்ணவர்கள் பெரிதும் மதித்துப் போற்றும் ராமானுஜரையும், பெருமாளையும் இழிவு படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், அவர் தமது மனுவில் கூறியிருக்கிறார். அவரது மனுவை உயர்நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கு தொடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அவர் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
கோவிந்த ராமானுஜதாசா அவர்களின் வழக்கு தொடர்பாக தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன்
அவர்கள், தமது திரைப்படத்தில் ராமானுஜரையோ, இந்துமதத்தையோ இழிவுபடுத்தும் காட்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூறினார். தமது
திரைப்படத்தை அதன் முழுமையான வடிவத்தில் பார்த்தால், இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாது என்றும் கூறிய அவர், இந்து மதம் உட்பட
எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தமக்கோ தமது திரைப்படத்திற்கோ இல்லை என்றும் கூறினார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்
நிலுவையில் இருப்பதால் தாம் இது தொடர்பாக மேலதிக கருத்துக்களை வெளியிட இயலாது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.