|
கிழக்கு மாகாண சபை தேர்தல்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நடந்து முடிந்த இலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான செய்திகள், செவ்விகள் மற்றும் ஆய்வுக் கண்ணோட்டங்கள்.
13/05/2008 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மாகாண தலைநகரான திருகோணமலைக்கு சென்றிருந்து நமது சுவாமிநாதன், புதிய அமைச்சரவை பதவியேற்கவிருப்பது தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து திருகோணமலை தலைமைச்செயலர் பாலசிங்கம் அவர்களை சந்தித்து கேட்டார். திரு.பாலசிங்கம் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துகளை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
12/05/2008 இலங்கையின் கிழக்கு மாகாணத் தேர்தல்கள் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியாகி உள்ள நிலையில் மாகாண அரசின் முதல்வர் யார் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் , முஸ்லீம் அமைப்புகளுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவுவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தற்போது லண்டனில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் செயலாளர் நாயகம் சுசில் ப்ரேம ஜயந்த, முதல்வர் பதவிக்கு தன்னை முன்னிறுத்திவரும் ஹிஸ்புல்லா மற்றும் தேர்தலை புறக்கணித்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு ஆகியோரின் செவ்விகளையும் செய்திகளையும் நேயர்கள் இங்கே கேட்கலாம்.
11/05/2008 இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபைக்காக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகையுள்ளன. அங்கு மொத்தமுள்ள் 35 இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 18 இடங்களும், ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டாணிக்கு 15 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு இரண்டு இடங்களும் கிடைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது குறித்த தகவல்கள், தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜே வி பி மற்றும் இதர கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள், கிழக்கு மாகாண சபைக்கு நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் எதை வெளிக்காட்டுகின்றன என்பது குறித்து இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா அவர்களின் பேட்டி ஆகியவை அடங்கிய செய்தித் தொகுப்பை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
10/05/2008 கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பான வன்முறைகளும் பல இடங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் தற்போது நடைபெற்று வருகிறது. கிழக்கு மாகாணத்தின் தலைமையகமான திருகோணமலையிலிருந்து தேர்தல் நிலவரம் குறித்து தற்போது அங்கிருக்கும் எமது சுவாமிநாதன் வழங்கும் செய்திக் குறிப்பு, தேர்தலில் முறைகேடுகளில் ஆளும் கட்சி ஈடுபட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குற்றம் சாட்டியிருப்பது குறித்து திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுபினரும் இலங்கை அரசின் அமைச்சருமான நஜீப் ஏ மஜீத் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துகள், வாக்குப் பதிவு ஆரம்பமாவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக திருகோணமலை துறைமுகத்திலிருந்த ஒரு சரக்கு கப்பல் விடுதலைப் புலிகளினால்தாக்கியழிக்கப்பட்டுள்ளது குறித்த விபரங்கள் போன்றவை அடங்கிய செய்தித் தொகுப்பினை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
07/05/2008 கிழக்கு மாகாணத் தேர்தல்களில் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், அங்கு போட்டியிடும் கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் அவர்களைச் சந்தித்த எமது தயாரிப்பாளர் சுவாமிநாதன், கிழக்கு மாகாணத் தேர்தல்களில் வெற்றி பெற்றால், அவர் முதல் அமைச்சராககூடும் என்ற யூகங்கள் இருக்கும் நிலையில், அவருக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை என்று அவர் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து கேட்டார்.
02/04/2008 இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவுத் மற்றும் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் 02/04/208 புதனன்று தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் தாம் மூவரும் தலைமை வேட்பாளர்களாகப் போட்டியிடப்போவதாகத் தெரிவித்தார். இதேவேளை, கடந்த 01/04/2008 அன்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டு அதன் சார்பில் எதிர்வரும் போட்டியிடப்போவதாகத் அறிவித்துள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, கட்சியின் தலைமைப்பீடம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட எடுத்த முடிவினாலேயே தான் அரசுடன் இணைந்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமென்பதே முஸ்லிம் மக்களின் பேரவா என்றும் இதனை அடைவதற்கு தான் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவது மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் கிழக்கே மாகாணசபை முதல்வர் பதவி குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச்சென்ற ஹிஸ்புல்லாவிடம் தெரிவித்ததாகக் கூறப்படும் இந்த கருத்துக்கள் குறித்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவுடன் , அதன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக பேசவல்ல ஆசாத் மௌலானா தமிழோசைக்கு வழங்கி செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்திலிருந்து 37 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடைபெறும் தேர்தல் இது. மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படும் 35 உறுப்பினர்களுடன் கூடுதல் வாக்குககளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு போனஸ் உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 37 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபைக்கான தேர்தலின்போது, 9 லட்சத்து 82 ஆயிரத்து 728 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து திருகோணமலையில் வரதராஜபெருமாள் அவர்கள், ஒருங்கிணைந்த அந்த மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றார். அவர் தலைமையிலான மாகாணசபையின் ஆட்சிமன்றம் சுமார் ஒரு வருட காலம் செயல்பட்டது. அதன் பிறகு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த தேர்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் முடங்கிப்போயின. இதனிடையே கடந்த ஆண்டு இலங்கையின் உச்சநீதிமன்றம் வடக்கையும் கிழக்கையும் தனித்தையாக பிரிக்கவேண்டும் என அளித்த தீர்ப்பை அடுத்து இவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டன. இவ்வாறு பிரிக்கப்பட்டு மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபைக்கான முதல் தேர்தல்
வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. 27 மார்ச் 2008 இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 27-3-2008 தொடங்கி ஒரு வாரகாலம் நடக்கிறது. ஏற்கனவே மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள், மத்திய அரசுகளினால் படிப்படியாக பறிக்கப்பட்டுள்ளதாக கூறும் வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எஸ்.எஸ்.எம் ஹனீபா, நடைபெறவிருக்கும் தேர்தல் முதலமைச்சர் தெரிவுக்கான ஒன்றாகவே தான் நோக்குவதாகக் குறிப்பிடுகின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படும் என மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையார் டி.கிருஷ்னானந்தலிங்கம் தெரிவிக்கிறார். இவர்களின் கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பை இங்கே கேட்கலாம்.
நடைபெறவுள்ள இந்த கிழக்கு மாகாண தேர்தல்கள் தொடர்பில் பல்வேறு கட்சிகளுக்கு இடையே மாற்றும் கருத்துக்கள் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தல்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது, இலங்கை அரசியலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இலங்கை பகுப்பாய்வாளரும் சசக்ஸ் பல்கலைகழகப் பேராசிரியருமான யுவி தங்கராஜா தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை அங்கே இன்னமும் உருவாகவில்லை என்றும், இந்த பின்னணியில் அங்கே தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசு அவசரம் காட்டக் கூடாது என்றும் தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஆனந்த சங்கரி அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவேண்டாம் என்று முடிவெடுத் திருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகந்தா அவர்கள் தமிழோசைக்கு அளித்த சிறப்புச்செவ்வியில் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தை தனியாக பிரித்து, அதற்கான தேர்தல்களை அவசரமாக நடத்துவதன் மூலம், வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிப்பதற்கு இலங்கை அரசு முயல்வதாகவும், இந்த முயற்சிக்கு துணை போகக்கூடாது என்பதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் ஸ்ரீகாந்தா அவர்கள் தெரிவித்தார். இது தொடர்பில் தமிழோசைக்கு அவர் அளித்த சிறப்புச்செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
சமீபத்தில் நடந்த மட்டக்களப்பு மாநகரபை உள்ளிட்ட சில உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அந்த தேர்தல் களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடாததற்கு கூறப்பட்ட காரணங்கள், கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்திற்கும் பொருந்தும் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்கள். அதேவேளை, கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்தில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்பு, கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம் தரப்பு கருத்தை அறிய தமிழ்தேசிய கூட்டமைப்பு விரும்புவதாகவும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் சமீபத்தில் நடந்த உள்ளூராட்சித்தேர்தலில் தமது கட்சி வேட்பாளர்கள் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறும் சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி யின் தலைவர் ராவ்ப் ஹக்கீம் அவர்கள், இது போன்ற அச்சுறுத்தல்கள் இருந்தாலும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என்கிறார். தமிழோசைக்கு அவர் அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
இலங்கையின் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சி பங்கேற்கும் என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எப். எனப்படும்
தற்போதைய சூழலில், இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்படுவதை தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதாக கூறுகிறார் அந்த கட்சியின் நாடாளு மன்றக்குழுவின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள். இது தொடர்பாக தமிழோசைக்கு அவர் அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
இலங்கையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான தேதிகளை இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக கொழும்பு செய்தியாளர் கருணாகரன் தரும் செய்தித் தொகுப்பு.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||