 |  பெரிய பட்ஜட் படங்கள் தொடருமா? | அதிக பொருட் செலவில் (பெரிய பட்ஜட்டில்) திரைப்படங்களைத் தயாரிப்பது இப்போது தமிழ் சினிமா உலகில் அதிகரித்து வருகிறது.அப்படியான பெரிய பட்ஜட் படங்கள் பெரும்பாலும் தயாரிப்பாளர்களை காப்பாற்றிவிடும் என்றும், ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களை விட இவை முதலீட்டளவில் இலாபத்தை சம்பாதித்துக் கொடுப்பதாகவும் சினிமா தயாரிப்பாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.  |  பிரமாண்டப் படங்களில் ரசிகர்களுக்கு ஆர்வம் | அதேவேளை இப்படியாக அதிக செலவில் தயாரிக்கப்படும் படங்கள் மிகவும் பிரமாண்டமாக அமைவதால் அவற்றை ரசிகர்களும் பெரிதாக விரும்புவதாகவும் கூறப்படுகிறது.வெறுமனே பிரமாண்டப் படங்களை உருவாக்காமல், அவற்றை கதை அம்சம் பொருந்திய படங்களாக உருவாக்க வேண்டிய அவசியம் குறித்தும் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். அண்மையில் வந்த படங்களில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களில் முக்கியமானதாக இயக்குனர் சங்கரின் ’அந்நியன்‘ பேசப்படுகிறது.  |  அந்நியன் படமும் அதிக செலவில் உருவாகிய ஒன்று | இந்தப் பெரிய பட முயற்சி பலராலும் பாராட்டப்பட்டாலும் இதில் உள்ள ஆபத்துக்கள் காரணமாகவும், சிறிய முதலீட்டில் படங்கள் எடுப்பதன் மூலம் பலருக்கு தொழில் வாய்ப்பு அளிப்பதுடன், நிறையப் படங்களையும் தயாரிக்க முடியும் என்பதால் சிறிய பட முயற்சிகளை பாராட்டுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அந்நியன் படத்தின் தயாரிப்பாளருக்கு அரசாங்க நிறுவனமான இந்தியன் தொழில் வளர்ச்சி வங்கி கடன் வழங்கியுள்ளதை சினிமாத் துறையினர் பாராட்டியுள்ளனர். அதேவேளை பெரும்பாலான படங்களின் தயாரிப்புக்கு எப்படி நிதி திரட்டப்படுகிறது என்பது குறித்து பலரும் பேசத் தயங்குவதாகக் கூறும் எமது செய்தியாளர், டி.என்.கோபாலன் ,கறுப்புப்பணம் ஒருபுறமும், சட்ட விரோதக் கும்பல்களின் சம்பந்தம் மறுபுறமும் இதற்கு துணை செய்கிறதா என்ற சந்தேகமும் காணப்படுவதாகவும் கூறுகிறார். |