இராக் வன்முறையிலிருந்து தப்பியோடும் யாஸிடி மக்கள்

12 ஆகஸ்ட் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 12:13 ஜிஎம்டி

இராக்கில் சுன்னி கிளர்ச்சிக்குழுவான இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகளின் வன்முறையிலிருந்து தப்ப , யாஸிடி இன மக்கள் தங்கள் சொந்த ஊரான சிஞ்சாரை விட்டு வெளியேறும் காட்சிகள் (படத் தொகுப்பு)
யாஸிடி இன மக்கள் ஆயிரக்கணக்கானோர் சிரியா எல்லைக்கருகே உள்ள சிஞ்சார் மலையின் வறண்ட முகடுகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். சிலர் நடந்தே சிரியா எல்லையைக் கடந்திருக்கின்றனர். தங்கள் சொந்த ஊரான சிஞ்சாரைப் பிடித்த, இராக்கின் கிளர்ச்சிக்குழுவான இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகள் செய்யும் வன்முறையிலிருந்து தப்ப அவர்கள் இவ்வாறு இடம்பெயர்கின்றனர்.
வார இறுதியில் சுமார் 20,000லிருந்து 30,000 பேர் வரை இராக்கிய-சிரியா எல்லையைக் கடந்துவிட்டதாக குர்டிஷ் பிராந்திய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசுகள், இந்த சிஞ்சார் மலைப் பகுதியில் சிக்கியிருக்கும் யாஸிடி அகதிகளுக்கு உதவ உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்களை விமானத்திலிருந்து போட்டு வருகின்றன.
பலர் தங்கள் வீடுகளிலிருந்து அவசரத்தில் வெளியேறிய நிலையில், அவர்களுக்கு இந்த 38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் குடிநீர் இல்லை.
தப்பியோடும் யாஸிடி இனக் குழந்தைகள்
ஐம்பதுக்கும் மேற்பட்ட யாஸிடி குழந்தைகள் நீர்ச்சத்து இழப்பால் இறந்துவிட்டதாக ஐநா மன்றம் கூறுகிறது.
மலையிலிருந்து வெளியேறியவர்கள், சிரியா ஊடாக டைகிரிஸ் நதியைக் கடந்து, மீண்டும் இராக்கிய குர்திஸ்தான் பகுதிக்குள் வந்துவிட்டார்கள்.
பயத்தில் தப்பியோடும்போது பல குடும்பங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து விட்டன. தங்கள் குடும்பத்தில் பிரிந்துவிட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று அவர்களுக்கு தெரியவில்லை.
வட இராக்கில் பிஷ்காபூர் என்ற இடத்தில் கடவுச்சாவடியைக் கடந்து, தாகத்துடன் வரும் இந்த யாஸிடி மக்களுக்கு தண்ணீர் பாட்டில்களைத் தந்து உதவுகிறார்கள் குர்டிஷ் பெஷ்மெர்கா படையினர்.
இராக்கிய சிரியா எல்லையில் ட்ரக்குகள் மற்றும் பிற வாகனங்கள் யாஸிடி மக்களைச் சுமந்து வருகின்றன.
சிலர் காரின் பின் பக்கம் பொதிகளை வைக்கும் ட்ரங்க்குகளில் பயணம் செய்தனர்.