BBC navigation

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 செப்டம்பர், 2013 - 13:22 ஜிஎம்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆளும் தொழிற்கட்சி பெரும் தோல்வியடைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக பொறுபேற்கவுள்ள டோனி அபாட்.

அங்கு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு லிபரல் தேசியக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து டோனி அபாட் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்தத் தேர்தலில் பொருளாதாரம், படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதித் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது, கரியமில வாயுவின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்படும் சுற்றுச்சூழல் வரியை குறைப்பது ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் சட்டப்படி தேர்தலில் வாக்களிப்பது அவசியம்.

கடந்த ஜூன் மாதம் தொழிற்கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஜூலியா கிலார்டை அடுத்து பதவிக்கு வந்த கெவின் ரட் பொதுத் தேர்தலை அறிவித்தார்.

புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள டோனி அப்பாட்டுக்கு ரூபர்ட் முர்டோக்கின் ஊடக நிறுவனம் முற்றாக ஆதரவைத் தெரிவித்தது.

இன்று முதல் ஆஸ்திரேலிய அரசு புதிய நிர்வாகத்தின் கீழ் வியாபாரத்தை தொடங்கியுள்ளது என்றும், தங்களுடன் வர்த்தகம் செய்ய வருபவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்றும் டோனி அபாட் அறிவித்துள்ளார்.

கெவின் ரட்டின் தொழிற்கட்சியின் ஆட்சியின் போது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் காணவில்லை என்பதும், உட்கட்சி பூசலுமே அதன் தோல்விக்கான முக்கிய காரணம் என்று சிட்னியிலுள்ள பிபிசியின் செய்தியாளர் ஜான் டேனிசன் கூறுகிறார்.

வெற்றிக்கான காரணம்

அதேவேளை, அகதிகள் தொடர்பில் அபாட் எடுத்த கடுமையான நிலைப்பாடு, ஒருபால் திருமணத்துக்கு எதிரான அவரது கருத்துக்கள், காலநிலை மாற்றம் தொடபிலான விஷயங்கள் குறித்து அவர் எழுப்பிய சந்தேகங்கள் ஆகிய அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டு, தொழிற்கட்சி ஆட்சி மீது இருந்த கடும் எதிர்ப்பு உணர்வு அவருக்கு கூடுதலை வாக்குகளை பெற்றுத் தந்தன என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார்.

படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் சிலர்.

ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலியாவும் கலந்து கொள்ளும் எனும் முடிவில் மாற்றம் இருக்காது என அங்குள்ள தமிழ் அமைப்புகள் கூறுகின்றன.

நாட்டின் புதிய பிரதமராக டோனி அபாட் அடுத்த சில தினங்களில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.