நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (6 எம்பி)

மலேசியாவின் புதிய கல்விக் கொள்கை இனவாதமானது என்று குற்றச்சாட்டு

31 ஜூலை 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 19:08 ஜிஎம்டி

மலேசியாவில் சர்ச்சைக்குரிய வகையில், அரசு அறிமுகப்படுத்தவுள்ள தேசிய கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

அரசின் புதிய கல்விக் கொள்கையை விளக்கும் கையேடு

‘ஒரு நாடு ஒரு மொழி’ எனும் கொள்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சிறுபான்மை மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் சீன மற்றும் தமிழ் தரப்பினர் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து 2025 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கான தேசிய கல்விப் பெருந்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் கல்வி நடவடிக்கைகளில் பெரிய மாறுதலை கொண்டுவர அரசு எண்ணியுள்ளது.

இதன் மூலம் நாட்டில் அனைத்து இன மக்களும் ஒரே சூழலில் ஒன்றிணைந்து பழகி தேசிய அளவில் வலுவான இணக்கப்பாடு ஏற்படும் என்று அரசு கூறுகிறது.

மலேசிய சிறார்கள்(படம் மலேசிய அரசு)

அரசின் புதிய கொள்கையின்படி, அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் பாஷா மலேசியா எனப்படும் மலாய் மொழி வழியிலான கல்வி கட்டாயமாக்கப்படுகிறது.

ஆனால் காலங்காலமாக அனைத்து இன மக்களும் தமது தாய்மொழியில் ஆரம்பக் கல்வியை பயின்று வரும் சூழலில், அரசின் இந்த முன்னெடுப்பு இந்திய தமிழ் மக்கள் மற்றும் சீன மக்களின் பண்பாட்டு கூறுகளையும், மொழியையும் அழித்து அவர்களின் இன அடையாளத்தை இல்லாமல் செய்யும் என்று இதற்கு எதிரானவர்கள் கூறுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையே இந்த புதிய தேசிய கல்விப் பெருந்திட்டம் என்று பிபிசி தமிழோசையிடம் கூறினார், மலேசிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கா.ஆறுமுகம்.