"கில்லார்ட் காடை வறுவல்": ஆஸ்திரேலியாவில் புதிய அரசியல் சர்ச்சை

  • 12 ஜூன் 2013
ஜூலியா கில்லார்ட்

ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சி நிதி திரட்டுவதற்காக நடத்திய ஓர் விருந்தில் தன்னுடைய உடல் அங்கங்களை கேலி செய்யும் விதமாக உணவு விவர அட்டை உருவாக்கப்பட்டிருந்ததை ஆஸ்திரேலியாவின் பெண் பிரதமர் ஜூலியா கில்லார்ட் கண்டித்துள்ளார்.

தாராளவாத தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கவுள்ள முன்னாள் அமைச்சர் மால் புரோ கொடுத்த ஒரு விருந்தில் சாப்பிட வந்தவர்களுக்காக இந்த உணவு விவர அட்டை உருவாக்கப்பட்டிருந்தது.

"ஜூலியா கில்லார்ட் கெண்டக்கி காடை வறுவல் - சிறுத்த மார்புகள், பெருத்த தொடைகள்," என அந்த அட்டையில் ஒரு உணவுக்கு விவரணை எழுதப்பட்டிருந்தது.

மலிவான ரசனையுடனும், அவமதிக்கும் விதமாகவும், பெண் பாலாரை ஏளனம் செய்யும் விதமாகவும் செய்யப்பட்ட ஒரு காரியம் இது என பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவரான டோனி அபாட்டும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மால் பரோவும் தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆனால் தாராளவாத தேசியக் கட்சி தொடர்ந்தும் இவ்விதமாக நடந்துகொள்கிறது என பிரதமர் ஜூலியா கில்லார்ட் குற்றம்சாட்டினார். மால் புரோ வேட்பாரளராக போட்டியிடுவதை அக்கட்சி ரத்துசெய்ய வேண்டும் என அவர் கூறினார்.

உணவு அட்டை விவரணை நல்ல ரசனையில் இல்லை என்றாலும், அதற்காக மால் புரோவை வேட்பாளரா களம் நிற்பதை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை என டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் பிற்பகுதியில் பிரிஸ்பேனில் நடந்த இந்த நிதிதிரட்டும் விருந்தில் இருபது பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

அந்த விருந்தின்போது பயன்படுத்துவதற்கு தயாரிக்கப்பட்ட இந்த உணவு விவர அட்டை எல்லோரும் பார்க்கும் விதமாக பயன்படுத்தப்படவில்லை இல்லை என்று இந்த விருந்து நடந்த விடுதியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஜூலியா கில்லார்ட் மட்டுமல்லாது முன்னாள் பிரதமர் கெவின் ரட்டையும், வேறு சில தொழிற்கட்சிப் பிரமுகர்களையும் கிண்டல் செய்யும் விதமான வாசகங்கள் அதில் இருந்தன.

பெண்களை இழிவுபடுத்தும் போக்கு சம்பந்தமான சூடான வாதப் பிரதிவாதங்களை ஆஸ்திரேலியாவில் இந்த விவகாரம் தோற்றுவித்துள்ளது.