BBC navigation

நேபாளத்தில் வனவிலங்கு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 ஜனவரி, 2013 - 16:54 ஜிஎம்டி
யானைகள்

யானைகள்

நேபாளத்தின் மொத்த நிலப்பரப்பில் 24 வீதம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.

அங்கு அண்மைய ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவரும் வனவிலங்கு பாதுகாப்பு செயற்திட்டம் பெருமளவு வெற்றிபெற்றுள்ளது.

நேபாளத்தின் தெற்கே உள்ள சித்வான் சரணாலயத்தில் இப்போது 500க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட இந்த எண்ணிக்கை அரைவாசியால் கூடியுள்ளது. அங்கு 125க்கும் அதிகமான புலிகளும் இன்று இருக்கின்றன.

அருகிவரும் பனிச் சிறுத்தைகள், சிவப்பு பன்டாக்கள் போன்ற உயிரினங்கள் இமயமலையை அண்டிய பகுதிகளில் தற்போது அதிகரித்துள்ளன.

யானைத் தந்தங்களுக்காகவும், காண்டாமிருக கொம்புகளுக்காகவும் தோல் மற்றும் பற்கள் உள்ளிட்ட வேறுபல வனவிலங்களின் உடற்பாகங்களுக்காகவும் மிருகங்கள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பதற்காக பல சரணாலயங்களில் ஆயுதந்தரித்த இராணுவத்தினர் கூட அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான பிரதேசங்களில் உள்ளூர் மக்களே தம்மை அண்டிய இந்தச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் காவலர்களாக இருந்துள்ளார்கள்.

ஆனால் அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் நேபாளத்தின் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, அங்கு காட்டுவிலங்குகள் அடித்து மனிதர்கள் சாவதும் சொத்துக்கள் அழிவதும் தொடர்ந்தும் நடந்துவருகின்றமை அந்த நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பெரிய சவாலாக மாறிப்போய் விட்டது.

விலங்கு-மனிதன் மோதல்

புலி போன்ற அருகிவரும் உயிரினங்களுக்கும் உச்சவரம்பு கொண்டுவருவது வனவிலங்கு பாதுகாப்பில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தும்

புலி போன்ற அருகிவரும் உயிரினங்களுக்கும் உச்சவரம்பு கொண்டுவருவது வனவிலங்கு பாதுகாப்பில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தும்

மக்கள் குடியிருப்புகளுக்கும் தேசிய வனவிலங்கு சரணாலயங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் விலங்களுக்கும்- மனிதர்களுக்கும் இடையிலான இருதரப்பு மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 80க்கும் அதிகமானவர்கள் யானை அடித்துச் செத்திருக்கிறார்கள். 17 விலங்குகள் பதிலடியில் செத்திருக்கின்றன.
சிறுத்தைகள் கடித்தும் பலர் செத்திருக்கிறார்கள்.

காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மக்கள் குடியிருப்புகளையும் சேனைப் பயிர்களையும் நாசம் செய்கின்ற சம்பவங்களும் தொடர்தும் நடக்கிறது.

'முன்னரெல்லாம் ஆண்டுக்கு ஒரு முப்பது பேர் காட்டுவிலங்குகளால் கொல்லப்படுவார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இனிமேல் அப்படியான விலங்குகளில் எத்தனையை எங்களின் சரணாலயங்களில் வைத்திருக்கமுடியும் என்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்துக்கு வந்துள்ளோம்' என்று நேபாளத்தின் வனப்பாதுகாப்புத்துறை அமைச்சின் பேச்சாளர் கிருஷ்ணா ஆச்சார்யா கூறுகிறார்.

ஆனால் இந்த முடிவு வனவிலங்கு பாதுகாப்புக்காக குரல்கொடுப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

'காட்டு விலங்குகளைப் பாதுகாத்துவரும் நேபாளத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு இந்த முடிவு பெரிய பின்னடைவைத்தான் ஏற்படுத்தும். தேசிய சரணாலயங்களை இன்னும் உன்னிப்பாக கண்காணிப்பதன் மூலமும் இன்னும் முறையாக நிர்வகிப்பதன் மூலமும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கலாம்' என்று WWF என்ற உலக வனவிலங்கு பாதுகாப்புக்கான அமைப்பின் நேபாளத்துக்கான இயக்குநர் அனில் மனந்தார் பிபிசியிடம் கூறினார்.

இன்று உலகளாவிய ரீதியில் அருகிவரும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான கரிசனைகளும் குரல்களும் வலுத்துவருகின்ற சூழ்நிலையிலும், நேபாளத்தில் அதிகரித்துவரும் மனித உயிரிழப்புகளுக்காக சரணாலயங்களில் வனவிலங்குகளின் எண்ணிக்கையை, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசே இறங்கவுள்ளமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.