'அமெரிக்காவில் துப்பாக்கி விதிகளை கடுமையாக்க வேண்டும்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 டிசம்பர், 2012 - 17:20 ஜிஎம்டி
உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை

உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை

அமெரிக்கா முழுவதிலும் துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று கனக்டிகட் மாகாணத்தின் ஆளுநர் டான் மேல்லோய் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்களை சுடப் பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கு கனக்டிகட் மாகாணத்தில் ஏற்கனவே தடை இருக்கின்ற போதிலும், அந்தத் தடை நாடு முழுவதிலும் இல்லாமையே தமது மாகாணத்திலும் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மட்டத்திலான சட்டத்தின் மூலம் மட்டுமே இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்களை தடுக்க முடியும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

6 முதல் 7 வயதுக்குட்பபட்ட 12 பெண்பிள்ளைகளும் 8 ஆண்பிள்ளைகளும் அவர்களுடன் 6 பள்ளிக்கூட பணியாளர்களும் துப்பாக்கிதாரியால் 14-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆசிரியர்களின் வீரதீரச் செயல்

ஆசிரியர்கள் சிலர் உயிரைக் கொடுத்து பிள்ளைகளை காப்பாற்றியுள்ளனர்.

ஆசிரியர்கள் சிலர் உயிரைக் கொடுத்து பிள்ளைகளை காப்பாற்றியுள்ளனர்.

பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக உயிர்த்தியாகம் செய்த ஆசிரியர்கள் சிலரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

சிறிய கழிப்பறை ஒன்றுக்குள் வைத்துப்பூட்டி ஆசிரியர் ஒருவர் பல குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.

தனக்கு உள்ளே செல்ல இடமில்லாமல் வெளியில் காவல்காத்த அந்த ஆசிரியர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.

இன்னும் இரண்டு ஆசிரியர்கள் 15 குழந்தைகளை, பயிற்சி ஒத்திகை என்றுகூறி, பொருட்களை வைக்கும் பெட்டியொன்றுக்குள் மறைந்திருக்கச் செய்து காப்பாற்றியுள்ளனர்.

இதேவேளை, அதிபர் ஒபாமா இன்று பிற்பகல் கனெக்டிகட் மாநிலத்தின் நியூடவுனில் உள்ள சாண்டி ஹூக் ஆரம்பப் பள்ளியில் கற்கும் மாணவர்களின் பெற்றோருடன் அஞ்சலிப் பிரார்த்தனை ஒன்றில் கலந்துகொண்டார்.

துப்பாக்கிதாரிக்கு அருகில் காணப்பட்ட 3 துப்பாக்கிகளில், இராணுவத்தினர் பயன்படுத்துவது போன்று தன்னியக்க வசதியும் கொண்ட ஒரு துப்பாக்கியும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆயுதங்கள் சட்டப்படியே பெறப்பட்டிருப்பதாகவும், அவை அனைத்தும் அந்த துப்பாக்கிதாரியின் தாயாரான நான்ஸி லான்ஸாவுக்கு சொந்தமானவை என்றும் பொலிசார் கூறியுள்ளனர்.

நான்ஸியும் அவரது மகனால் கொல்லப்பட்டுள்ளார்.

நான்ஸி லான்ஸா துப்பாக்கிகளில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்றும் துப்பாக்கிகளை சேகரிப்பதை பொழுதுபோக்காகக் கொண்ட அவர், தனது மகனையும் அழைத்துக்கொண்டு அடிக்கடி துப்பாக்கி பயிற்சி இடங்களுக்கு செல்வார் என்றும் அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.