ஆப்கன்: நேட்டோ விமானத் தாக்குதலில் பெண்கள் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 செப்டம்பர், 2012 - 18:28 ஜிஎம்டி
நேட்டோ தாக்குதலில் கொல்லப்பட்ட பெண்ணொருவர்

நேட்டோ தாக்குதலில் கொல்லப்பட்ட பெண்ணொருவர்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் நடத்தியுள்ள விமானத் தாக்குதலில் குறைந்தது 8 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

லாக்மான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை, விறகு பொறுக்குவதற்காக மலைப் பிரதேசமொன்றுக்குச் சென்றிருந்த பெண்களே இவ்வாறு விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் இருந்த ஆயுததாரிகளை இலக்குவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆனால் அங்கு பொதுமக்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் நேட்டோ பேச்சாளர் கூறினார்.

இந்த சம்பவத்தை ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாய் வன்மையாக கண்டித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு படையினர் மீது மக்கள் ஆத்திரமடைவதற்கு அங்கு தொடர்ந்தும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுவரும் சேதங்களே காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

வெளிநாட்டுப் படை மீது உள்ளூர் பொலிஸ் தாக்குதல்

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இன்று அமெரிக்கச் சிப்பாய்கள் 4 பேர் உள்ளூர் பொலிஸ்காரர் ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாட்டின் தெற்கே உள்ள ஜபுல் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் ஆப்கானிய பொலிஸ்காரர் ஒருவர் சர்வதேச படையினரைக் கொன்றுள்ள இரண்டாவது சம்பவம் இது.

நேற்று சனிக்கிழமை, ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆப்கானிய பொலிஸ் சீருடை அணிந்துவந்த நபர் ஒருவர் பிரிட்டிஷ் சிப்பாய்கள் இருவரை சுட்டுக் கொன்றிருந்தார்.

இதுதவிர, நாட்டின் கிழக்கிலுள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டதை அடுத்து பொலிசாருக்கும் ஆயுதக் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் பல மணிநேர துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.