
மருத்துவர் அஃப்ரிடி
பாகிஸ்தானினில் மிகவும் சக்தி வாய்ந்த உளவுத் துறையான ஐ எஸ் ஐ, அமெரிக்காவையே தனது மிக மோசமான எதிரியாகக் கருதுகிறது என, ஒசாமா பின் லாடனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தானிய மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பெஷாவர் சிறையிலிருந்து தொலைபேசி மூலம், அமெரிக்காவின் ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு பேட்டியிலேயே டாக்டர் ஷகீல் அஃப்ரிடி இவ்வாறு கூறியுள்ளார்.
தம்மை விசாரணை செய்த ஐ எஸ் ஐ அதிகாரிகள், தமது பாரம்பரிய எதிரியான இந்தியாவை விட அமெரிக்கா மோசமான ஒரு எதிரி என்று கூறினர் என அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பெருமை
சிறையில் தான் சித்திரவதை செய்யப்பட்டதாக் கூறும் டாக்டர் அஃப்ரிடி, அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏவுக்குகாக பணியாற்றியதில் தான் பெருமை கொள்வதாகவும் அந்தப் பேட்டியில் தெரிவித்ததாகவும் ஃபாக்ஸ் தொலைக்காட்சி கூறுகிறது.
ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டு கடந்த மே மாதம்அவருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அமெரிக்கர்களுக்கு உதவி புரிந்ததற்காகவே அவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என பரந்துபட்ட அளவில் பார்க்கப்படுகிறது என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.








