bbc.co.uk navigation

கூடுதலான அகதிகளை ஏற்றுக் கொள்ள ஆஸி. முடிவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஆகஸ்ட், 2012 - 10:08 ஜிஎம்டி
பிரதமர் ஜூலியா கிலார்ட்

பிரதமர் ஜூலியா கிலார்ட்

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 40 வீதம் அகதிகளைஏற்றுக் கொள்ளும் என்று பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்துள்ளார்.

உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கையை 13,500-இலிருந்து 20,000 ஆக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு மற்றும் தஞ்சம் கோருபவர்களை தொலைதூர பசிபிக் தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கும் நடவடிக்கை மூலம் ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து பெற விரும்புகிறவரகள் முன்கூட்டியே அதற்கான விண்ணப்பத்தை அனுப்புவதை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜூலியா கிலார்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை நோக்கி வரும் தஞ்சம் கோருவோரை ஏற்றிய படகுகளின் எண்ணிக்கை அண்மைக்காலங்களாகவே அதிகரித்துவருகின்றது.

ஆனால் மக்கள் கடல் மூலமான மிக ஆபத்தான கடற்பயணங்களை கைவிட்டு சட்டரீதியான வழிகளில் தஞ்சம் கோருவதை ஊக்குவிப்பது தான் தமது நாட்டில் அனுமதிக்கப்படும் அகதிகளின்

எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதற்கு காரணம் என்று பிரதமர் ஜூலியா கிலார்ட் மேலும் கூறுகிறார்.

பாலா விக்னேஷ்வரன் செவ்வி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்:அரசின் அணுகுமுறையில் முன்னேற்றம்?

ஆஸ்திரேலிய தமிழர் பேரவையின் அகதிகள் விவகார அதிகாரி பாலா விக்னேஷ்வரன்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் அரசியல் ரீதியாக திண்டாடிக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அரசு, தஞ்சம் கோருவோரின் பிரச்சனையை ஆராய்வதற்காக அமைத்த சுயாதீன ஆணைக்குழுவின் 22 பரிந்துரைகளில் ஒன்றுதான் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு.

அதுபோல ஆணைக்குழுவின் இன்னொரு பரிந்துரையின்படியே, நவ்றூ மற்றும் பப்புவா நியூ கினி ஆகிய இடங்களில் உள்ள தஞ்சம் கோருவோருக்கான விசாரணை முகாம்களும் மீண்டும் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

'ஆபத்தான கடற்பயணங்களை தடுக்க முடியாது'

கடந்த ஆண்டில் மட்டும் 600 பேர் மூழ்கியுள்ளனர்

கடந்த ஆண்டில் மட்டும் 600 பேர் மூழ்கியுள்ளனர்

இதேவேளை, ஆஸ்திரேலிய அரசு கூறுவதைப் போல ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் ஆபத்தான கடல் பயணங்களை தடுக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஆஸ்திரேலிய தமிழர் பேரவையின் அகதிகள் விவகார அதிகாரி பாலா விக்னேஷ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்கின்ற அகதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும் குறைத்திருந்தாலும் கூட தஞ்சம்கோரி கடல் பயணங்களில் ஈடுபடுவோரை குறைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசின் புதிய அறிவிப்பை வரவேற்க முடிந்தாலும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தான் தமது நிலைப்பாடு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்தாலும் அங்கு இயல்பு நிலைமை வழமைக்குத் திரும்பவில்லை என்றும் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை என்றும் ஆஸ்திரேலிய தமிழர் பேரவையின் அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, ஆஸ்திரேலியாவை சென்றடையும் நோக்கில் மோசமான நிலையில் உள்ள படகுகள் மூலம் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டவர்களில் 600க்கும் அதிகமானவர்கள் கடந்த ஓராண்டில் கடலில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.