
காபூல் அதிபர் மாளிகையில் ஹிலரி மற்றும் ஹமீட் கர்சாய்
ஆப்கானிஸ்தானுக்கு (Major non-NATO ally) 'நேட்டோ-சாராத முக்கிய கூட்டாளி நாடு' என்ற அந்தஸ்தை அமெரிக்கா அளித்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கின்ற ஆஸ்திரேலியா, எகிப்து,இஸ்ரேல் போன்ற நாடுகளைப்போல ஆப்கானிஸ்தானும் ஆயுத ஏற்றுமதிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்களில் அமெரிக்காவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே அறிவிக்கப்படாத திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து பெரும்பாலான நேட்டோ படைகள் வெளியேறுகின்ற 2014-ம் ஆண்டுக்குப் பின்னர், அந்நாட்டுக்கு என்ன வகையான உதவிகளை வழங்கலாம் என்று ஆராய்வதற்கான முக்கிய கொடை நாடுகளின் மாநாடு ஜப்பானில் நடக்கவுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை டோக்யோவில் நடைபெறுகின்ற மாநாட்டில் கலந்துகொள்கின்ற பிரதிநிதிகள், ஆப்கானிஸ்தானுக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்களை அபிவிருத்தி நிதியாக வழங்குவது பற்றி ஆராயவுள்ளனர்.
இதேவேளை, தமது நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கு ஆண்டுக்கு தேவையான 4 பில்லியன் டாலர்களுக்கு மேலதிகமாக ஆண்டுக்கு இன்னும் 4 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக ஆப்கனின் மத்தியவங்கி கூறியுள்ளது.
டோக்யோ உதவி மாநாட்டில் ஆப்கனுக்கான உதவித்தொகையை அதிகரித்துக்கொள்வது என்பது மிகச்சவாலான விடயமாக இருக்கும் என்று பிரிட்டனின் மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கொடை நாடுகளிடமிருந்து கூடுதல் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது.
பதிலுக்கு டோக்யோ மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் பிரதிநிதிகள், ஆப்கன் அரசிடமிருந்து நல்லாட்சி மற்றும் வெளிப்படைத் தன்மைக்கான உத்தரவாதங்களை எதிர்ப்பார்ப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
ஆப்கானி்ஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ள நேட்டோ-சாராத முக்கிய கூட்டாளி நாடு என்ற அந்தஸ்த்தை 'அந்நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய அமெரிக்காவின் அக்கறையின் சக்திமிக்க அடையாளச் சின்னம்' என்று அதிபர் ஹமீட் கர்சாயுடனான பேச்சுக்களின் பின்னர் ஹிலரி கிளிண்டன் கூறினார்.








