bbc.co.uk navigation

பிரான்ஸ் பொதுத் தேர்தல்: பலப்பரீ்ட்சையில் ஒலாந்த்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஜூன், 2012 - 10:56 ஜிஎம்டி
நாடாளுமன்றத்தையும் கைப்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஃபிரான்ஸுவா ஒலாந்த் இருக்கிறார்

நாடாளுமன்றத்தையும் கைப்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஃபிரான்ஸுவா ஒலாந்த் இருக்கிறார்

பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் முதல்சுற்று வாக்குப்பதிவில் அந்நாட்டு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.


புதிய அதிபர் ஃபிரான்ஸூவா ஒலாந்த் புதிய சீர்திருத்தங்களை முன்வைத்துள்ள பின்னணியில், அவரது அரசாங்கத்துக்கு இந்தத் தேர்தல் தீர்க்கமானதாகப் பார்க்கப்படுகிறது.


முதல்சுற்றுடன் ஆரம்பிக்கும் கீழவைக்கான வாக்குப்பதிவின் பின்னர் அங்கு இரண்டாம் சுற்று வாக்குப்பதிவும் இன்னும் ஒரு வாரத்தில் நடத்தப்படும்.


இந்தத் தேர்தலில் அதிபர் ஒலாந்தின் சோஷலிஸ்ட் கட்சி பெரும்பான்மை ஆதரவை தட்டிக்கொள்ளுமானால், அவரது தீர்க்கமான வரிவிதிப்பு மற்றும் செலவினக் கொள்கைகளுக்கு முக்கிய அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்தத் தேர்தலில் வலதுசாரி மற்றும் இடதுசாரி அணிகளுக்கு இடையிலேயே பலத்த போட்டி நிலவுகின்றது.


அண்மையில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருந்த கடும்போக்கு வலதுசாரியான தேசிய முன்னணி, 577 ஆசனங்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றமான தேசிய அசெம்பிளியில் எப்படியாவது இடத்தைப்பிடித்து விடவேண்டும் என்று போராடுகிறது.


தேசிய அசெம்பிளியின் மேலவையான செனட் ஏற்கனவே சோசலிஸ்ட்டுகளின் பிடியில்தான் இருக்கிறது.

இப்போது கீழவையிலும் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள ஃபிரான்ஸுவா ஒலாந்த் அணியால் முடியுமானால் அவரது புதிய திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள வசதியாக இருக்கும் என்று பாரிஸிலுள்ள பிபிசி செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.


ஒலாந்த் அரசாங்கம் திருத்தப்பட்ட புதிய வரவுசெலவு திட்டமொன்றை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.


இந்தத் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றிபெறமுடியாது போனால், அதிபர் பதவி ஒரு கட்சியிடமும் நாடாளுமன்றம் இன்னொரு போட்டிக் கட்சியிடமும் மாட்டிக்கொள்ளக்கூடிய 'இழுபறிக்குள்' பிரான்ஸ் தள்ளப்படலாம் என்ற நிலை இருக்கிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.