BBC navigation

தாய்லாந்து நாய்கள் இறைச்சிக்காக வெளிநாடுகளுக்கு கடத்தல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 மார்ச், 2012 - 14:38 ஜிஎம்டி
வெளிநாட்டுக்கு கொண்டுசெல்லப்படும் வழியில் பிடிபட்ட நாய்கள்

தென்கிழக்கு ஆசியாவில் பல இடங்களில் உணவாக மாறவிருந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான தாய்லாந்து நாய்களை தாங்கள் காப்பாற்றியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

வியட்நாமில் சில பகுதிகளிலும் சீனாவிலும் நாய் இறைச்சியை மக்கள் ருசியான உணவாக சிலாகித்து உண்ணுகின்றனர்.

அங்கிருப்பவர்களுக்கு இறைச்சியாய் விற்பதற்காக தெருநாய்களும் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களும் பிடிக்கப்பட்டு சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்ற வழக்கம் தாய்லாந்தில் காணப்படுகிறது.

தாய்லாந்தின் வடகிழக்கே லாவோஸுடனான எல்லை அருகே சுமார் 800 நாய்கள் ஏற்றப்பட்ட ஒரு லாரி அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது.

சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இறைச்சிக்காக நாய்களைக் கடத்தும் சட்டவிரோத வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இந்த நாய்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவ்வாறாக பிடிக்கப்படும் நாய்களை அடைத்து வைப்பதற்கென்றே தாய்லாந்து அரசு கூடாரங்களை அமைத்துள்ளது.

தமது பௌத்த நம்பிக்கைகளின் காரணமாக தாய்லாந்தின் அதிகாரிகள் பெருகிவரும் தெருநாய்களை பிடித்துச் சென்று கொல்வதில்லை. மாறாக நாய்களை கூடாரத்தில் அடைத்துவைக்கிறார்கள்.

ஆனால் இப்படி தொடர்ந்து நாய்களை அடைத்து வைக்க இடமில்லை. நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விரைவில் வழி ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லாபம் தரும் வியாபாரம்

தாய்லாந்தில் நாய்க் கடத்துவது அதிக லாபம் தரும் ஒரு வியாபாரமாக இருப்பதுதான் பிரச்சினை.

தாய்லாந்தில் பிடிக்கப்பட்ட ஒரு நாயை 10 டாலர்கள் விலைக்கே வாங்கலாம். இந்த நாயின் எடை, பருமன், நிறம் எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் சீனாவிலோ வியட்நாமிலோ ஒரு நாய் 30 டாலர்கள் வரை கூட விலை போகிறது

நாய்கள் திருடப்படுவதையோ கடத்தப்படுவதையோ தடுக்கிற விஷயத்தில் தாய்லாந்தின் சட்டங்கள் உதவிகரமாக இல்லை என்று அனிமல் கார்டியன்ஸ் அசோசியேஷன் என்ற மிருகவதை பாதுகாப்பு அமைப்பின் ரோஜர் லோஹனன் சுட்டிக்காட்டுகிறார்.

"நாய்கள் பிடிக்கப்படுவதையும் திருடப்படுவதையும் தடுப்பதற்கென்று விசேடமான சட்டம் எதுவும் தாய்லாந்தில் இல்லை. சட்டவிரோதமாக நாய்கள் பிடிக்கப்படுவதை தடுக்கின்ற விசேட சட்டங்கள் முதலில் கொண்டுவரப்பட வேண்டும்." என்று ரோஜர் கூறினார்.

தென் கிழக்கு ஆசியாவில் மக்களின் வருமானம் அதிகரித்துவருகிற ஒரு சூழ்நிலையில், நாய்க் கறி போன்ற நூதன உணவுக்கு கிராக்கி அதிகரிக்கத்தான் செய்யும்.

உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதியாளராகவும் இரால் ஏற்றுமதியாளராகவும் விளங்கிவருகின்ற தாய்லாந்து, இந்த கடத்தல்காரர்கள் மற்றும் திராணியற்ற சட்டங்களின் புண்ணியத்தில் பிராந்தியத்தின் முன்னணி நாய்க்கறி ஏற்றுமதியாளராகவும் மாறும்போலத் தெரிகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.