
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்
சோமாலியாவின் எதிர்காலம் குறித்து ஆராயும் ஒரு மாநாடு வியாழக்கிழமை (23.2.12) லண்டனில் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த மாநாட்டில் அங்கு செயல்படும் முக்கிய இஸ்லாமியக் குழுவான அல் ஷபாபுக்கு இடமில்லை.
அந்நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதியின் பெரும்பாலன நிலப்பரப்பு அல் ஷபாபின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொடர்ந்து கடும் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் அல் ஷபாப், நாட்டின் தலைநகர் மொகடிஷுவிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பல ஆண்டுகளாக நடக்கும் மோதலின் விளைவு
அல் ஷபாப் அமைப்பின் மீதான தாக்குதலும், அதனால் அதற்கு ஏற்பட்ட பின்னடைவும், லண்டன் மாநாட்டுக்கு ஒரு முக்கிய காரணம். இந்தத் தாக்குதல்கள் சோமாலியாவின் எதிர்காலம் குறித்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேற்கிலிருந்து எத்தியோப்பியாவும் தெற்கிலிருந்து கென்யாவும், தலைநகரிலிருந்து ஆப்பிரிக்க ஒன்றியப் படைகளும் தாக்குதலை நடத்திவரும் நிலையில், அல் ஷபாப் கடுமையான எதிர்தாக்குதலை சந்திக்கிறது.
எனினும் அந்த ஆயுதக் குழு இன்னும் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது.

அண்மையில் சோமாலியாவில் இடம்பெற்ற ஒரு கார் குண்டுத் தாக்குதல்
மற்ற எந்த கெரில்லா அமைப்பைப் போலவே தாக்குதல் நடத்தும் வல்லமை அந்த அமைப்புக்கு இன்னமும் உள்ளது. அதன் மீதான தாக்குதலை, கூடுதல் வல்லமை கொண்ட படைகள் நடத்திவரும் வேளையில், அல் ஷபாபினர் மக்களிடையே கலந்துவிடக் கூடும்.
கார் குண்டுகளையும், தற்கொலை குண்டுதாரிகளையும் குறிப்பிடத்தகுந்த விளைவுகளை ஏற்படுத்த அல் ஷபாப் இன்னமும் பயன்படுத்தி வருகிறது.
அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களை இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தவும் தமது இயக்கத்தை விரிவுபடுத்த வலிந்து ஆட்சேர்ப்பு செய்யவும் அல் ஷபாபின் கொள்கை அனுமதிக்கிறது.

சோமாலியாவில் செயல்படும் சிறார் போராளிகள்
அல் கயீதாவுடன் அல் ஷபாப் கொண்டுள்ள தொடர்புகள், அதற்கு ஓரளவுக்கு அதிகாரத்தையும் பணம் கிடைப்பதற்கான வழியையையும் ஏற்படுத்தியுள்ளது.
கென்யா மற்றும் தான்சானியாவிலுள்ள அமெரிக்கத் தூதரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக தேடப்பட்ட அல் கயீதா உறுப்பினரான முகமது ஃபசுல் அப்துல்லா இறுதியாக கடந்த ஆண்டு மொகடிஷுவில் கொல்லப்பட்டதும், அப்போது அவரிடம் 40,000 டாலர்கள் இருந்ததும் எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
இப்படியான சூழலில் சோமாலியத் தலைவர்கள் லண்டனில் தங்களது சர்வதேச நன்பர்களை சந்தித்து பேசும்போது, அங்கு உண்மையான ஒரு முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அல் ஷபாபை எப்படி சமாளிப்பது என்பது முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.








