
'நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை'-கிலானி
பாகிஸ்தானின் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பதிவுசெய்திருக்கிறது.
பிரதமர் தான் குற்றம் செய்யவில்லை என்று வாதிட்டிருக்கிறார். இந்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு சில வாரங்கள் ஆகலாம் , ஆனால் நாட்டின் இந்த இரு உயர் பதவிநிறுவனங்களுக்கும் இடையே நடந்து வரும் இழுபறி யுத்தம் முடிவுக்கு வருவது போல் தோன்றுகிறது.
கிலானியின் அரசு பதவிக்கு வந்ததிலிருந்தே நாட்டின் உயர் நீதித்துறையுடன் ஒரு சுமுகமான உறவைப் பேணுவதில் பிரச்சினைகளை சந்தித்திருந்திருக்கிறது.
இந்த இரு தரப்புக்கும் இடையே நிலவும் பரஸ்பர சந்தேகங்களுக்கு மையமான காரணமே, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய தலைமை நீதிபதி இப்திக்கார் சௌத்ரி அதற்குமுன்னர் அப்போதைய அதிபர் பெர்வேஸ் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இருந்தபோது, அவரை மீண்டும் பதவியில் அமர்த்த,பாகிஸ்தான் அதிபர் ஸர்தாரி, ஆரம்பத்தில் சற்று தயக்கம் காட்டியதுதான் என்று கூறப்படுகிறது.
அதிலிருந்தே, நாட்டின் உச்ச நீதிமன்றம்,கிலானி அரசு செய்த உயர் பதவி நியமனங்களை ரத்து செய்வது, அரசை மோசமான ஒரு பிம்பத்தில் காட்டும் வழக்குகளை எடுத்துக்கொள்வது என்று, அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்கு கிடைத்த எந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடவில்லை.
சர்ச்சைக்குரிய மெமோகேட் வழக்கும் இதற்கு ஒரு சரியான உதாரணம்.
ஆனால் இந்த தற்போதைய இந்த இழுபறி ஒரு முழுமையான அளவு வெளிப்படையான மோதலாக எப்போதும் வெடிக்கவில்லை. ஏதாவது ஒரு தரப்பு கடைசி நிமிடத்தில் பின்வாங்கிவிடும்.
ஆனால் இந்த முறை, இது ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றே தோன்றுகிறது. ஆனால் இந்த ஆண்டு பின்னதாக பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், எந்த மாதிரியான முடிவை இது எட்டும் என்பதைத் தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது.
பாகிஸ்தானில் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் வரலாற்று ரீதியாகவே பார்த்தால், நாட்டின் பிற நிறுவனங்களுடன் இது போன்ற மோதல் சூழ்நிலைகளைக் கண்டிருக்கின்றன. எப்போதுமே ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பலமாக இருப்பதை சகித்துக்கொள்ளாத பாகிஸ்தான ராணுவம் இது போன்ற சூழ்நிலைகளில் ரகசியமாக எரிகிற தீயில் எண்ணெயை வார்க்கும் வேலையைச் செய்து வந்திருக்கிறது.
அரசாங்கத்தின் நோக்கம் இந்த ஆண்டு மார்ச்ச் மாதத்தில் நடக்க இருக்கும் செனட் தேர்தல்கள் வரை பதவியில் இருப்பது என்பதுதான் என்று தோன்றுகிறது. அது வரை அதுபதவியில் நீடித்தால், 30 ஆண்டுகளில் முதன்முறையாக, அது நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மையை பெற்றுவிடும். இதைப் பெற தவறுவது என்பது சாத்தியமானதல்ல.
உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை, அதிபர் சர்தாரியின் மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிப்பது என்பதுதான் நோக்கம் என்று தோன்றுகிறது. இந்த வழக்குகள் வரும் ஏப்ரலுக்குள் மீண்டும் திறக்கப்படாவிட்டால், வழக்குகளை விசாரிக்க இருக்கும் காலவரம்பு குறித்த சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்று சில வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள்.
அது உண்மையெனில், அரசு, இந்த காலவரம்பு வரும் வரை, பிரச்சினையை இழுத்தடிக்க விரும்பும் . அதற்கு வேண்டிய கால அவகாசமும் அதனிடம் இருக்கிறது. கிலானி குற்றம் செய்தவராகக் காணப்பட்டால் கூட, அவரை பதவியிலிருந்து இறக்கி, அவருக்கு பதிலாக மற்றொருவரை பிரதமராக்கும் வேலையில் , அரசாங்கம் எதிர்பார்க்கும் கால அவகாசம் கிட்டிவிடும்.
இதனால்தான், இந்த மோதல் ஒரு நோக்கம் ஏதும் எட்ட முடியாத மோதலாகவே பார்க்கப்படுகிறது.








