
நஷீட் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்படும் காட்சி
மாலைதீவுகளின் முன்னாள் அதிபர் முஹமட் நஷீட்டை கைது செய்வதற்கான பிடியாணை ஒன்றை அங்குள்ள ஒரு குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இருந்தபோதிலும் அவரை கைது செய்வவதற்கான உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாது என்று அங்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபரான முஹமட் வாஹிட் ஹஸன் கூறியுள்ளார்.
'மாலைதீவுகள் பிரச்சினையை தீர்க்க ஐநா முயற்சி'
மாலைதீவுகள் பிரச்சினையை தீர்க்க ஐநா மற்றும் அமெரிக்க முக்கியஸ்தர்கள் வருவதாகக் கூறுகிறார் அங்குள்ள ஹிந்து நாளிதழின் செய்தியாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணன்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
நேற்றைய தினம் நஷீட்டின் ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் செய்து தடியடி நடத்தியதில், அவர் உட்பட பலர் காயமடைந்த பின்னர் தற்போது இந்த நீதிமன்ற உத்தரவு வந்திருக்கிறது.
நீதிபதி ஒருவரை கைது செய்வதற்காக அவர் பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவு ஒன்றை அடுத்து நஷீட் அவர்கள் பதவி விலகச் செய்யப்பட்டார். தான் ஆயுத முனையில் பதவி விலகச் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
என்ன குற்றச்சாட்டின் பேரில் நஷீட்டை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது என்று எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான தொல்ஹத் இப்ராஹிம் கலேஃபானு அவர்களையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நஷீட்டின் மாலைதீவுகள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் கூறியுள்ளார்கள்.
இலங்கையில் நஷீட்டின் குடும்பம்
இதற்கிடையே நஷீட் அவர்களின் குடும்பத்தினர் இலங்கைக்கு சென்றிருப்பதாக இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களுக்கு கூறியுள்ளார்.
முன்னதாக நஷீட் அவர்களை நேறைய ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஒரு கடையில் இருந்து பொலிஸார் இழுத்துச் செல்வது மற்றும் அவரது ஆதரவாளர்களை பொலிஸார் தாக்குவது ஆகிய காட்சிகள் இடம்பெறும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

போராட்டக்காரர்களை தாக்கும் பொலிஸார்
தனது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து நஷீட் ஊடகங்களுக்கு செவ்வியளித்துள்ளார்.
அதில் மாலைதீவுகள் வன்செயல்களை தடுப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
நஷீட் அவர்களின் தலைமையில் நடந்த போராட்டத்தை ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று அரசாங்க தொலைக்காட்சி அறிவித்திருந்தது.
ஆனால், தமது கூட்டம் அமைதியாகவே நடந்ததாகவும் பொலிஸார் வந்ததால்தான் அமைதியீனம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
நஷீட் அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளதாக அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறியுள்ளார். அங்குள்ள பிரிட்டிஷ் தூதர் ஜோண் ரங்கின் அவர்களும் அதே வகையிலான கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை, இந்தியா உட்பட பல வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாலைதீவுகளில் பல துறைகளிலும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் சுதர்சன் சுப்ரமணியம் அங்கு நிலைமைகள் புதனன்று பரவாயில்லை என்று கூறினார்.
வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்கும் பிரச்சினையில்லை என்றும் அவர் கூறினார்.








