bbc.co.uk navigation

அண்டார்ட்டிக் பகுதியில் ரஷ்ய விஞ்ஞானிகள் சாதனை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 பிப்ரவரி, 2012 - 15:39 ஜிஎம்டி

தென்துருவப் பகுதியான அண்டார்ட்டிக் பிரதேசத்தில் உறைந்த நிலையில் உள்ள பனிப்படிப்படலத்துக்கு கிழே நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு துளையிடும் தங்களது திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ரஷிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஆய்வு நடத்தப்பட்ட இடம்

இந்தத் திட்டத்தை முன்னெடுத்த புனித பீட்டர்ஸ்பர்க் நிலையம், இந்தக் கண்டுபிடிப்பை இன்று வெளியிட்டது.

வெள்ளைக் கண்டம் என்றழைக்கப்படும், அண்டார்ட்டிக் பனிப் பிரதேசத்தில், உறைநிலையிலுள்ள பனிப்படலங்களுக்கு கீழே 300க்கும் அதிகமான ஏரிகள் இருப்பதாக அரியப்படும் நிலையில், ஒரு ஏரியில் இந்த அளவுக்கு ஆழமாக துளையிடப்படுவது இதுவே முதல் முறை.

அண்டார்ட்டிகாவின் உறைந்த சரித்திரம் மற்றும் சூரிய மண்டலத்தில் வேறெங்கெல்லாம் உயிரினம் இருக்கக் கூடும் என்பதை இந்த ஏரிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

கடந்த சில தசாப்தங்களில் அண்டார்ட்டிகாவில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. அதிலும் குறிப்பாக இந்த அய்வை மேற்கொண்ட ரஷிய ஆய்வு மையமான வோஸ்டாக் நிலையம், அந்தக் கண்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மிகக் கடும் சவால்களை சந்திக்க வேண்டிய ஒரு இடமும் அது. அங்கு வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு கீழே 90 டிகிரி வரை குறையக் கூடும்.

ஆனாலும் இப்படையான மிகக்கடுமையான சுற்றுசூழல் நிலவும் சூழலில் தான், விஞ்ஞானிகளும், பொறியிலாளர்களும் பனிப்படலத்தை குடைந்து அதற்கு கீழே பெருமளவில் திரவ நிலையில் இருக்கும் நீரை அடைய முயற்சி செய்தார்கள்.

தற்போது விஞ்ஞானிகளால் குடைந்து அடையப்பட்டுள்ள அந்த ஏரியின் அடிமட்டம், சிறிய ஐரோப்பிய நாடான லக்ஸம்பர்கின் அளவைவிட ஆறு மடங்கு பெரியாதாக உள்ளது என்று ரேடார் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் இருக்கும் கற்படுகைகளின் உஷ்ணம் மற்றும் அந்த ஏரிக்கு மேலேயுள்ள பனிப்படலத்தின் அதீதமான அழுத்தம் காரணமாக, அந்த அளவுக்கு ஆழத்தில் உள்ள நீர் திரவ நிலையில் உள்ளது.

"பல விபரங்கள் தெரியவரும்"

வோஸ்டாக் ஏரியில் தாங்கள் நடத்திய ஆய்வுகள், அண்டார்ட்டிகாவின் காலநிலை முன்னர் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அண்டார்டிக் பகுதியில் இருக்கும் சில ஏரிகளை சுட்டிக்காட்டும் படம்

அந்த அளவு ஆழத்தில் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படக் கூடும் என்பது குறித்தும் அவர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அந்தப் பகுதியில் இருக்கும் இருக்கும் நீர் பல ஆயிரம் ஆண்டுகளாக உலகத்துடன் தொடர்பு இல்லாத நிலையிலேயே இருந்துள்ளது.

அப்படியான சூழலில் அந்த ஏரியில் இருந்திருக்கக் கூடிய நுண்ணுயிரிகள் வேறு ஒரு வடிவம் பெற்றிருக்கும். மேலும் நாம் வாழும் பூமிக்கு அப்பால் உயிரினங்கள் இருக்கக் கூடிய சாத்தியகூறுகள் குறித்தும் இந்த ஏரியிலிருந்து தெரியவரும்.

சூரிய மண்டலத்தில் பல கோள்களை சுற்றி வரும் துணை கிரகங்கள் பலவற்றில் உறை நிலையில் இருக்கும் பகுதிகளுக்கு கீழே இருக்கும் நீரின் தன்மைகளுக்கும், இந்த ஏரியில் இருக்கும் நீரின் தன்மைகளுக்கும் இடையே பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது.

வேஸ்டாக் ஏரியில் உயிரினங்கள் வாழ முடியுமானால், வியாழனைச் சுற்றிவரும் யூரோப்பா துணைக் கோளிளோ அல்லது சனிக்கிரகத்தை சுற்றி வரும் என்ஸிலேடஸ் துணைக் கோளிலோ உயிரினங்கள் வாழக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்பது உறுதியாகக் கூடும்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.