
ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை பொலிஸார் கைது செய்கிறார்கள்
மாலைதீவுகளில் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட முதலாவது அதிபரும், செவ்வாயன்று பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டவருமான நஷீட் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தலைநகர் மாலேயில், மோதல்கள் வெடித்துள்ளன.
பலர் அதில் காயமடைந்ததுடன், பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
பதவி விலக்கப்பட்ட அதிபரான முஹமட் நஷீட் அவர்கள் உரையாற்றிய கூட்டம் ஒன்றில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகமும் தடியடி பிரயோகமும் செய்ததை அடுத்து இந்த அமைதியீனம் உருவானது.
தான் துப்பாக்கி முனையில் பதவி துறக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாக நஷீட் அங்கு கூறியுள்ளார்.
புதிதாக பதவியேற்ற அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரியே இந்த ஆர்ப்பாட்டக் கூட்டம் நடத்தப்பட்டது.
தற்போது புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள முஹமட் வாஹிட் ஹஸன் அவர்களுக்கு தெரிந்திருந்த ஒரு இராணுவப் புரட்சிக்கான திட்டத்தை அடுத்தே தான் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதாக நஷீட் கூறியுள்ளார்.
ஆனால், புதிதாக அதிபராகப் பதவியேற்ற முஹமட் வாஹிட் ஹஸன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.
தனக்கு எந்தவிதமான சதிப்புரட்சியுடனும் சம்பந்தம் கிடையாது என்று அவர் மறுத்துள்ளார்.
பலகட்சி ஜனநாயகத்துக்கும், ஒருமைப்பாட்டு அரசாங்கத்துக்கும் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் புதிய அதிபர் கூறியுள்ளார்.








