
பதவி துறந்த அதிபர் நஷீட்
மாலை தீவுகள் நாட்டின் அதிபர் முஹமட் நஷீட் அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஒரு மூத்த நீதிபதியை கைது செய்வதற்கான அவரது சர்ச்சைக்குரிய உத்தரவு குறித்து சில வாரங்களாக நடந்த பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து இந்த இரராஜினாமா நடந்திருக்கிறது.
அங்கு ஏற்பட்ட ஒரு பொலிஸ் புரட்சியை அடுத்து, தான் பதவியை துறக்காவிட்டால், அங்கு இரத்தக் களரிதான் ஏற்படும் என்ற நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனை நஷீட் அவர்களும் ஒப்புக்கொள்கிறார்.

அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது சில வாரங்களுக்கு முன்னதாகவே மாலைதீவுகளில் ஆரம்பமாகிவிட்டது. அங்கு இருக்கின்ற உயர் குற்றவியல் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான அப்துல்லாஹ் முகமட் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று விடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய உத்தரவே இந்தப் போராட்டங்களை தூண்டி விட்டுள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய விமர்சகரான ஒருவரை சிறையில் இருந்து விடுதலை செய்ததன் மூலம், நீதிபதி அரசுக்கு எதிராக செயற்பட்டார் என்று அதிபர் அந்த நீதிபதி மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த நீதிபதி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்களும் குரல் கொடுத்தன.
நிலைமைகள் வெகு வேகமாக சூடு பிடிக்கவே ஐநா தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் வலுவடைந்தன.

இவை எல்லாவற்றுக்கும் மாலைதீவுகளில் ஜனநாயகம் இல்லாமையே காரணம் என்ற வாதம் பலராலும் முன்வைக்கப்படுகின்றது. அங்கு நடக்கும் நிகழ்வுகளால் ஜனநாயக கோட்பாடுகள் சவாலை எதிர்கொள்வதாக உள்ளூர் செய்தியாளரான ஜோண் ஜேம்ஸ் றொபின்சன் அவர்கள் கூறுகிறார்.
இங்கு இருக்கின்ற இன்னுமொரு முக்கிய விடயம், 30 வருடங்களாக ஆட்சியில் இருந்த முன்னாள் அதிபர் கயூமுக்கும், 4 வருடங்களுக்கு முன்னதாக முதலாவது பலகட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் நஷீட்டுக்கும் இடையிலான பதற்றமாகும்.
பிரபல்யமான மனித உரிமைச் செயற்பாட்டாலரான நஷீட் அவர்கள், முன்னாள் அரசியல் கைதியும் கூட.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தும் ஒருவராகவும் அவர் திகழ்ந்தார்.
ஆனால், முன்னாள் அதிபர் கயூமின் ஆதரவாளர்களிடம் இருந்தும், நஷீட்டை இஸ்லாத்துக்கு எதிரானவர் என்று விமர்சிக்கும் மதப் பழமைவாதிகளிடம் இருந்து நஷீட் கடுமையான எதிர்ப்புக்களை தொடர்சியாக சந்தித்து வந்தார்.
அடுத்த வருடம் தேர்தல் நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
அதேவேளை அதிபர் நஷீட்டின் நடவடிக்கைகள் அவரை ஏனைய கூட்டணிக் கட்சிகள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார் அவருக்கு பதிலாக அதிபராக பதவியேற்றுள்ள அவரது சகாவாக இருந்த முஹமட் வாஹிட் ஹஸன்.
ஆனால், நடக்கப்போகின்ற தேர்தல்களில் இந்த விவகாரங்கள் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றன, மாலைதீவுகளில் ஒரு பக்குவமடைந்த ஜனநாயகம் உருவாவதற்கு இவற்றின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்பவைதான் இப்போது அங்கு இருக்கின்ற கேள்விகளாகும்.








