
இரான் அதியுயர் தலைவர் அயதுல்லாஹ் அல் கமேய்னி
இரானைத் தாக்க முயற்சிக்கவோ அல்லது அதன் அணுத்திட்டத்தி்ற்கு எதிராக தடைகளை விதிக்கவோ கூடாது என்று இரானின் அதியுயர் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தம்மை அச்சுறுத்துவதோ அல்லது தம்மீது தாக்குதல் நடத்துவதோ அமெரிக்காவிற்கு எதிரான அச்சுறுத்தலாகவே வந்துமுடியும் என்றும் இரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அல் கமேய்னி கூறியுள்ளார்.
இரானின் அணுத்திட்ட நோக்கங்களை தடுப்பதற்கான காலம் கடந்துகொண்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுத் பராக் அந்நாட்டு பாதுகாப்புக் கூட்டமொன்றில் தெரிவித்து ஒரு நாள் கடந்தநிலையில் இரான் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறது.
இதேவேளை, இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதையிட்டு கவலையடைந்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செயலரும் கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் மற்றும் இரான் நாட்டுத் தலைவர்களின் இந்தக் கடுமையான கருத்துப் பரிமாற்றங்களையும் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லியோன் பனேட்டாவிடமி்ருந்து வந்திருக்கின்ற தகவலையும் பார்க்கின்றபோது, பிரச்சனை இன்னும் தீவிரமடைந்துவருவதாகத் தெரிகிறது.

இஸ்ரேலிய பிரதமர் பென்யாமீன் நெதன்யாஹூ (நிற்பவர்), பாதுகாப்பு அமைச்சர் எகுத் பராக்
மேற்குலகும் இஸ்ரேலும் இரான் அணு ஆயுத வல்லமையை வளர்த்துக்கொள்ளப்பார்க்கிறது என்று நெடுநாளாக குற்றஞ்சாட்டிவருகின்றன. ஆனால் இரான் அதனை மறுத்துவருகின்றது.
நீண்டகாலமாக நீறுபூத்த நெருப்பாக புகைந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சனை அவ்வப்போது சுவாலைவிட்டு மறைந்திருக்கின்றது.
இப்போது இருதரப்பிலிருந்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்பட்டிருக்கின்ற வார்த்தைப் பிரயோகங்கள் நிலைமையை இன்னும் சூடாக்கிவிடுவதாக உள்ளன.
இரான் எப்படியான திட்டங்களை வைத்திருக்கிறது, அதன் அணுத்திட்ட வடிவமைப்புகள் எப்படியிருக்கப் போகின்றன என்பது பற்றிய தெளிவுகள் இல்லாமலும் இரானைப் பற்றி இஸ்ரேல் எப்படியான மதிப்பீடுகளை வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமலும் வெளியுலகம் குழப்பத்தில் இருக்கிறது.
ஐநாவின் சர்வதேச அணுச்சக்தி தொடர்பான கண்காணிப்பு நிறுவனத்தின் புதிய அறிக்கையை மேற்கோள்காட்டி அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இரான் மீது கிடுக்கிப்பிடியான தடை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.








